வழிப்பறி சம்பவத்தில், மூளையாக செயல்பட்ட சைதாப்பேட்டை உதவி ஆய்வாளர் கைது.. சிறையில் அடைப்பு..!
கடந்த 17ஆம் தேதி சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை அருகே, முகமது கவுஸ் என்பவர் 20 லட்சம் ரூபாயை எடுத்துக் கொண்டு காரில் சென்று கொண்டிருந்த நிலையில், அவரை காரில் கடத்தி, அவரிடம் இருந்து 20 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்த வழக்கில் திருவல்லிக்கேணி காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜா சிங் உள்பட சில போலீஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் விசாரணை நடந்த போது, அவர்களுக்கு மூளை ஆக செயல்பட்டது சைதாப்பேட்டை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சன்னி லாய்டு என்பது தெரியவந்தது. இதனை அடுத்து, சன்னி லாய்டு தலைமறைவாகியிருந்த நிலையில், அவரைப் பிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் பதுங்கியிருந்த சன்னி லாய்டை கடந்த மாதம் போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியதை அடுத்து, 4 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது. தற்போது விசாரணை முடிவடைந்த நிலையில், அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
காவல் சிறப்பு உதவியாளர் சன்னி லாய்டு பூக்கடை காவல் மாவட்டத்தில் பணிபுரிந்த போது, சட்டவிரோத பண பரிமாற்றம், குருவிகளை கண்காணித்து அவர்களை காவல் நிலையத்தில் ஒப்படைக்காமல், நேரடியாக வருமானவரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்து, அதிகாரிகள் அனைவரும் சேர்ந்து வழிப்பறி செய்து வந்தது தெரியவந்தது.
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Siva