ரஜினிகாந்த் உயிரோடு நடமாட முடியாது: வைரலாகும் பெரியார் ஆதரவாளர்களின் மிரட்டல் வீடியோ
சமீபத்தில் துக்ளக் ஐம்பதாவது ஆண்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த், பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் செய்திகள் வெளியாகி வருகிறது. இதனால் ரஜினிக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்
இந்த நிலையில் ரஜினி வீட்டுக்கு எதிராக நேற்று பெரியார் ஆதரவாளர்கள் சிலர் போராட்டம் நடத்தினார். இந்த போராட்டத்தின் மீது ஆவேசமாக பேசிய பெரியார் ஆதரவாளர்கள் சிலர், ‘ரஜினிகாந்த் தமிழ்நாட்டில் உயிரோடு நடமாட முடியாது என்றும் அவரது கையை வெட்டுவோம் என்றும் இந்த போராட்டம் இதோடு நிற்காது என்றும் அவர்கள் தெரிவித்தனர்
இந்த பேட்டியை அனைத்து ஊடகங்களும் பதிவு செய்தன என்பதும் ஆனால் ஒரு ஊடகம் கூட இது குறித்த செய்தியை வெளியிடாமல் இருட்டடிப்பு செய்தது என்பதும் ரஜினி ரசிகர்களின் குற்றச்சாட்டாக உள்ளது.
பொதுவெளியில் ஒருவரை கையை வெட்டுவோம் உயிரோடு நடமாட விட மாட்டோம் என மிரட்டல் விடுத்தவர்கள் மீது அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்ற கேள்வியையும் ரஜினிகாந்த் ரசிகர்கள் எழுப்பியுள்ளனர். இருப்பினும் தங்களது அமைப்பின் விளம்பரத்திற்காக இவ்வாறு பெரியார் ஆதரவாளர்கள் மிரட்டி வருவதாகவும் அதனை கண்டுகொள்ளாமல் அடுத்த கட்ட வேலையை தொடங்குவோம் என்று ரஜினி மக்கள் மன்றத்தின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது