1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : ஞாயிறு, 5 பிப்ரவரி 2017 (17:35 IST)

ஜெ. வீட்டில் உள்ளவர்கள் முதல்வராக மக்கள் வாக்களிக்கவில்லை - சசிகலாவை சீண்டும் ஸ்டாலின்

தமிழக மக்கள் ஜெயலலிதா அரசு அமையவே வாக்களித்தார்கள் மற்றும் ஒ.பன்னீர்செல்வம் அல்லது ஜெயலலிதா வீட்டில் உள்ள மற்றவர்கள் ஆட்சி நடத்த வாக்களிக்கவில்லை என்று திமுக செயல்தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.


 

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை குழு தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, சட்டமன்றக் குழு தலைவராக ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதை முதல்வர் பன்னீர்செல்வம் முன் மொழிய, அனைத்து எம்.எல்.ஏக்களும் வழி மொழிந்தனர். இதில் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தனது ராஜினாமா கடிதத்தை சசிகலாவிடம் கொடுத்தார்.

முன்னதாக பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திற்கு அளித்திருந்த பேட்டியில், “2016ஆம் ஆண்டு மே மாதம் நடந்த தேர்தலில் மக்கள் ஜெயலலிதா ஆட்சி செய்ய வேண்டும் என்று வாக்களித்தார்களே தவிர, ஓ.பன்னீர்செல்வத்திற்கோ அல்லது ஜெயலலிதா வீட்டில் இருப்பவர்களுக்கோ அல்ல.

தற்போதைய ஆட்சியில் இருப்பவர்களுக்கு மக்களின் ஆதரவு இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. அதிமுகவில் நிலவும் உட்கட்சி பிரச்சனைகள் சட்டசபையையோ, தமிழக ஆட்சி நிர்வாகத்தையோ பாதித்துவிடக்கூடாது என்பதே எதிர்க்கட்சித் தலைவரான தனது பிரதான கவலை.

மாநிலத்தில் தற்போதைய அரசியல் சூழலையை திமுக உன்னிப்பாக கவனித்து வருகிறது. இப்போதிருக்கும் சூழ்நிலையில் எந்த முடிவையும் திமுக ஜனநாயக விதிகளுக்கு உட்பட்டே இருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.