திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : வெள்ளி, 5 மே 2017 (09:59 IST)

திமுக ஆட்டோ டிரைவரை மிரட்டிய ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ

திமுக ஆட்டோ டிரைவரை மிரட்டிய ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ

ஓபிஎஸ் ஆதரவு அணியில் உள்ள ஆறுகுட்டி எம்எல்ஏ கோவையில் உள்ள ஆட்டோ டிரைவர் ஒருவரை போனில் மிரட்டிய ஆடியோ ஒன்று வாட்ஸ் அப்பில் வெளியாகி உள்ளது. இதனை எம்எல்ஏ ஆறுகுட்டியும் ஒப்புக்கொண்டுள்ளார்.


 
 
கோவை அவினாசி அருகேயுள்ள ஹோப் காலேஜ் பகுதியில் ஒரு ஆட்டோ ஸ்டாண்டு இயங்கி வருகிறது. இங்கு திமுகவை சேர்ந்த ஒருவர் புதிய ஆட்டோ ஒன்றை வாங்கி நிறுத்த வந்தார். ஆனால் அதற்கு அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
 
இந்த விவகாரம் கவுண்டம்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ., ஆறுக்குட்டியிடம் சென்றது. அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள் முறையிட்டதை அடுத்து ஆறுகுட்டி எம்எல்ஏ திமுகவை சேர்ந்த அந்த ஆட்டோ டிரைவரிடம் செல்போனில் தொடர்புகொண்டு பேசினார்.
 
அப்போது அந்த ஆட்டோ டிரைவரிடம் எம்எல்ஏ ஆறுகுட்டி மிகவும் கோபமாகவும், மிரட்டல் தொனியிலும் பேசியுள்ளார். இதனை அந்த ஆட்டோ டிரைவர் வாட்ஸ் அப்பில் வெளியிட பரபரப்பு ஏற்பட்டது.
 
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஆறுகுட்டி எம்எல்ஏ வாட்ஸ் அப்பில் வெளிவருவது நான் பேசியது தான் என ஒப்புக்கொண்டார். மேலும் வீணாக பிரச்னை செய்யும் ஒருவரிடம் என்னால் கெஞ்சிக் கொண்டு பேச முடியாது. சில நேரத்தில் இதுபோல் பேசினால்தான் புரியும் என்றார்.