1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Modified: வெள்ளி, 6 பிப்ரவரி 2015 (15:45 IST)

நாம் தமிழர் கட்சியில் ‘வீரத்தமிழர் முன்னணி’ என்ற புதிய அமைப்பு

நாம் தமிழர் கட்சியில் பண்பாட்டு மீட்புப்படையணியாக ‘வீரத்தமிழர் முன்னணி’ என்ற புதிய அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.


 
இது குறித்து நாம் தமிழர் கட்சி சார்பில் கூறப்பட்டுள்ளதாவது:-   
 
பண்பாட்டு புரட்சி இல்லாது, அரசியல் புரட்சி வெல்லாது என்பதை நடுகல் மரபினராகிய நாங்கள் நன்கு உணர்ந்துள்ளோம். இயற்கை வழிபாட்டை கொண்ட தமிழர் நாம் உலகப் பொதுமறையாம் திருக்குறளே எமது மறை; எங்கள் வழி வள்ளுவம்; எங்கள் வழிபாடு இயற்கை; எங்கள் தெய்வங்கள் முன்னோர்கள் என்ற நெறியின் படி வாழ்ந்து வருகின்றோம்.
 
இருப்பினும், பெரும்புகழ் இறையோன் முருகன், வாழ்வியல் நெறிகட்டி வள்ளுவப் பெருந்தகை, தமிழ்மொழி இலக்கணம் கண்ட தொல்காப்பியர், மகத்துவம் பொருந்திய மாமுனி அகத்தியர், அறம் முழங்கிய ஔவை பாட்டி, நீதியின் வடிவம் கண்ணகி, வழிபாட்டு வழிகாட்டி அய்யா வள்ளலார், ஆன்மிகமும் அறிவியலும் கற்பித்த ஆசான் திருமூலச் சித்தர், அய்யா வழி வைகுந்தர், பெருமைமிகு கிருபானந்த வாரியார், மதிப்புமிகு குன்றக்குடி அடிகளார் உள்ளிட்டோரைக் குறியீடுகளாகக் கொண்டும், எங்கள் இனம் காக்க போராடிய கரிகாற்சோழன், அருண்மொழிச்சோழன், அரசேந்திர சோழன், பூலித்தேவன், தீரன் சின்னமலை, வேலு நாச்சியார், பண்டார வன்னியன், மருதுபாண்டியர், அழகுமுத்துக்கோன், பெரும்பிடுகு, சுந்தரலிங்கம், ஒண்டிவீரன் ஆகியோரை தெய்வங்களாக நெஞ்சில் நிறுத்தியும் வரும் தைப்பூச நாட்களில் புதிய எழுச்சிக்கு நாம் தயாராகியுள்ளோம்.
 
எனவே, பிப்ரவரி 7 ஆம் தேதி பழனியில் தமிழ்ப் பண்பாட்டை மீட்கவும் காக்கவும் வீரத்தமிழர் முன்னணியைத் தொடங்க இருக்கிறோம். மாலை 3 மணிக்கு பழனியாண்டவர் கலை கல்லூரியிலிருந்து பேரணி தொடங்கி தேரடி வீதியில் நிறைவடைந்து துவக்க விழா பொதுக் கூட்டம் நடைபெறுகிறது.