நிர்மலா தேவி சர்ச்சை : முதல்வர் இருக்க ஆளுநர் அவசரம் காட்டுவது ஏன்?
நிர்மலா தேவி விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆளுநர் விசாரணைக்குழு அமைக்கப்பட்ட விவகாரம் சர்ச்சையையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மதுரை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் ஒரு தனியார் கல்லூரியில் பயிலும் 4 மாணவிகளிடம் தவறாக பேசிய பேராசிரியை நிர்மலா தேவியின் ஆடியோ சமீபத்தில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தற்போது நிர்மலா தேவி கைது செய்யப்பட்டுள்ளார். மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த ஆடியோ வெளியானதும், அடுத்த நாள் காலை டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மதுரை பல்கலைக்கழக துணை வேந்தர் செல்லதுரை, நிர்மலா தேவியின் பேச்சுக்கும், மதுரை பல்கலைக்கழகத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என் அவசரமாக மறுத்தார். மேலும், இதுபற்றி 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது எனக் கூறினார்.
சம்பந்தப்பட்ட கல்லூரி வாசலின் முன்பு பெற்றோர்கள் ஒன்று கூடி, நிர்மலா தேவியை கைது செய்ய வேண்டும் என போராட்டம் நடத்திய பின்பே, கல்லூரி சார்பில் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் 12 மணியளில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மாலை 7 மணிக்கு மேல்தான் நிர்மலா தேவியை கைது செய்து அழைத்து சென்றனர். அதுவரை வீட்டை பூட்டிக்கொண்டு விட்டு வெளியே வராமல் நிர்மலா தேவி அடம்பிடித்தது வேறு கதை.
இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். இதிலிருந்து யாரும் தப்ப முடியாது என வழக்கம் போல் அதிமுக அமைச்சர்கள் பேட்டியளித்தனர். மேலும், நிர்மலா தேவி பேசும் போது ஆளுநர் மட்டத்தில் தனக்கு செல்வாக்கு இருக்கிறது எனக் கூறுகிறார். அவரை தாத்தா என நினைக்காதீர்கள் எனவும் கூறுகிறார்.
பல்கலைக்கழக உயர் அதிகாரிகள் கேட்கிறார்கள் என நிர்மலா தேவி கூறியுள்ளார். ஆனால், துணைவேந்தர் செல்லதுரை ஒரு குழுவை அமைத்துள்ளார். ஆளுநர் வட்டம் வரை தனக்கு செல்வாக்கு உண்டு என நிர்மலா தேவி கூறுகிறார். இந்நிலையில்தான், இதுபற்றி விசாரிக்க ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில் ஒரு குழுவை ஆளுநர் பன்வாரிலால் அமைத்துள்ளார்.
இப்படி, சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளின் தலைமையிலேயே விசாரணைக் குழு அமைத்தால் உண்மை எப்படி வெளியாகும் எனவும், நியமிக்கப்பட்ட முதல்வர் இருக்க ஆளுநர் ஏன் குழுவை அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார் எனவும் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், சிபிஐ விசாரணையை தடுக்க வேண்டும் என்கிற நோக்கத்திலேயே ஆளுநர் அவசரமாக செயல்பட்டுள்ளார் எனவும் கருத்துகள் எழுந்துள்ளது.