சிறுமி ஜெயஸ்ரீ கொல்லப்பட்ட செய்தி நெஞ்சை பதற வைக்கிறது – முதல்வர் பழனிசாமி
விழுப்புரம் மாவட்டம் சிறுமதுரையைச் சேர்ந்த ஜெயபால் என்பவரின் மகள் ஜெயஸ்ரீ. இவரை கடந்த 10 ஆம் தேதி கலியபெருமாள் உள்ளிட்ட சிலர் முன்பகை காரணமாக ஜெயஸ்ரீ மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்து விட்டனர். இதில் சிறுமி மருத்துவமனையில் அனுமதிப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அதற்கு முன் அவர் உடல் கருகிய நிலையில் வாக்கு மூலம் கொடுத்துள்ளார். இந்நிலையில் ஜெயஸ்ரீயின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளேன் என முதல்வர் பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது :
விழுப்புரம் - சிறுமதுரையில் சிறுமி ஜெயஸ்ரீ மிருகத்தனமாக கொல்லப்பட்ட செய்தி நெஞ்சை பதற வைக்கிறது. இக்கொடூர செயலை வன்மையாக கண்டிக்கிறேன். சிறுமியின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். இச்செயலில் ஈடுபட்டுவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தனது மற்றொரு பதிவில், விழுப்புரம் மாவட்டம் சிறுமதுரை கிராமத்தில் நிகழ்ந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த சிறுமி ஜெயஸ்ரீயின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.