1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By bala
Last Modified: வியாழன், 16 மார்ச் 2017 (13:44 IST)

பூகம்பத்தை விட வேகமானவர் தினகரனாம்: சொல்வது நாஞ்சில் சம்பத்

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக டிடிவி தினகரனை அறிவித்துள்ளனர். இதற்கு வாழ்த்து கூறி நாஞ்சில் சம்பத் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில்,



அஇஅதிமுகவின் ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் வேட்பாளராக கழகத் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் அவர்களை கழகத்தின் ஆட்சி மன்றக்குழு தேர்ந்தெடுத்திருக்கிற செய்தி கழகத் தோழர்கள் நெஞ்சிலும் தமிழ்நாட்டின் சுகதுக்கத்தைப் பற்றி கவலைப் படுபவர்கள் நெஞ்சிலும் மட்டற்ற மகிழ்ச்சியை தந்து இருக்கிறது. ஒரு துப்பாக்கியின் ஓசையை விட அதிகமாகவும் , ஒரு பூகம்பத்தின் சீற்றத்தை விட வேகமாகவும் இயங்கும் இயல்புடையவர் தினகரன்.

ஐந்து ஆண்டு காலம் பெரியகுளம் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு அவர் செயல்படும் விதத்தைப் பார்த்த தொகுதி மக்கள் அவரை இராணித்தேனியாகக் கருதினார்கள் இன்றும் கருதுகிறார்கள். தனக்கென்று விதிக்கப்பட்ட கடமையை செய்து முடிப்பதில் தினகரன் காட்டுகின்ற கரிசனமும் கண்காணிப்பும் அக்கறையும் அலாதியானது. பொதுவாழ்வில் தினகரனைப் போன்ற அபூர்வமான மனிதர்களை காண்பது அரிது.

ஒன்றரை கோடி தொண்டர்களின் சங்கமமாக விளங்குகின்ற கழகத் தேரின் சாரதி தினகரன் சட்டமன்றத்திற்கு செல்ல வேண்டியது வரலாற்று தேவை காலத்தின் கட்டாயம். மக்கள் திலகம் எம்ஜிஆர் முதலமைச்சராக முடிசூடிய பொன்வேலையில் தலைநகர் சென்னையில் எல்லாத் தொகுதிகளும் திமுக கைவசமாக எம்ஜிஆரை அன்று ஏணியாக ஏற்றி வைத்தது அன்று ஆர்.கே.நகர் மட்டுமே.

ஆர்கே நகர் மக்கள் புரட்சித்தலைவரையும் புரட்சித்தலைவியையும் தோணியாக தூக்கிச் சுமந்தார்கள். எந்தக் காலத்திலும் அஇஅதிமுகவுக்கு பக்க பலமாக இருக்கிற மக்கள் ஆர்கே நகர் மக்கள். அந்த மக்களை நம்பி அம்மா அந்த தொகுதிக்கு அறிவித்த திட்டங்களை நடைமுறைப்படுத்த தினகரன் களம் காணுகிறார். களம் காணப் போகிற தினகரன் தோளுக்கு என்னுடைய மாலைகளை அணிவிக்கின்றேன்.

வெல்ல முடியாத கையை வெல்லப் போகின்ற தினகரன் அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன். காவியம் செய்யப் போகின்ற தினகரன் அவர்களுக்கு கையெழுத்தாகி உதவப் போகிறேன். அவருடைய வெற்றிக்கு வித்தாக விழுவதற்கு வாருங்கள் வாலிப தம்பிகளே! வரலாறு படைப்போம் தொகை தொகையாய் பகை வந்தாலும் பகையை முடிப்போம், துரோகத்தை ஆழக்குழி தோண்டி புதைப்போம் என்று கூறியுள்ளார்.