1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: திங்கள், 5 ஜூன் 2017 (11:32 IST)

பாராலிம்பிக் வீரர் மாரியப்பனுக்கு கொலை வழக்கில் தொடர்பு?: விசாரணை நடத்த உறவினர்கள் கோரிக்கை!

பாராலிம்பிக் வீரர் மாரியப்பனுக்கு கொலை வழக்கில் தொடர்பு?: விசாரணை நடத்த உறவினர்கள் கோரிக்கை!

பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பனுக்கு வாலிபர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கில் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. இதனால் அவரிடம் விசாரணை நடத்த உயிரிழந்த வாலிபரின் உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


 
 
சேலம் மாவட்டம் பெரிய வடுகம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது காரின் மீது கடந்த சனிக்கிழமை சதீஷ்குமார் என்ற வாலிபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் மோதியதில் அவரது கார் கைப்பிடி உடைந்தது. இதனால் சதீஷ் குமாரிடம் மாரியப்பன் உடன் வந்தவர்கள் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
 
இதனையடுத்து சதீஷ்குமாரின் வீட்டுக்கும் சென்று காரின் கதவு கைப்பிடியை சரி செய்து தரும்படி கூறி தகராறில் ஈடுபட்டதாகவும், அவர்களுக்குள் சண்டை ஏற்ப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதற்கு சதீஷ்குமார் தன்னிடம் தற்போது பணம் இல்லை எனவும், திங்கட்கிழமை சரி செய்து தருகிறேன் என கூறியுள்ளார்.
 
ஆனால் இதில் சமாதானம் ஆகாத மாரியப்பன் மற்றும் அவருடன் வந்தவர்கள், விலை உயர்ந்த இந்த புதிய கார் கதவின் கைப்பிடியை சரி செய்ய 20 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும். உன்னால் எப்படி சரி செய்து தர முடியும் என மீண்டும் தகராறில் ஈடுபட்டும் மிரட்டியும் உள்ளார்.
 
இதனையடுத்து சதீஷ் குமார் காணாமல் போயுள்ளார். பின்னர் ஞாயிற்றுக்கிழமை காலை அவரை ரயில்வே டிராக் புதரின் அருகில் பிணமாக கண்டெடுத்துள்ளனர். இதனையடுத்து இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், சதீஷ்குமார் தண்டவாளத்தை கடந்தபோது ரயில் மோதி இறந்தாரா? ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? அவரது மரணத்துக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
இந்நிலையில் சதீஷ்குமாரின் மரணத்தில் சந்தேகம் உள்ளதால் மாரியப்பனிடம் விசாரணை நடத்த வேண்டும் என சதீஷ்குமாரின் பெற்றோர்களும், உறவினர்களும் கோரிக்கைவைத்துள்ளனர். போலீசாரும் இது தொடர்பாக மாரியப்பனிடம் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.