எம்ஜிஆரை பாத்து அந்த வார்த்தையை சொல்லிட்டேன்! – மனம் திறந்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!
எம்ஜிஆர் நூற்றாண்டு சிறப்பு மலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த காலத்தில் எம்ஜிஆர் உடனான பசுமையான நிகழ்வுகள் குறித்து பேசியுள்ளார்.
சென்னை எம்ஜிஆர் ஜானகி மகளில் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நேற்று ஜானகி – எம்ஜிஆர் நூற்றாண்டு விழா மற்றும் எம்ஜிஆர் புத்தக வெளியீட்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டு பேசினார்.
அப்போது அவர் “தமிழ்நாட்டின் முதல் பெண் முதலமைச்சர் என்ற பெருமைக்கு உரியவர் ஜானகி எம்ஜிஆர்தான். 1996ல் திமுக தலைவர் கருணாநிதி ஆட்சிக்கு வந்தபோது சத்யா ஸ்டுடியோ அருகே கல்லூரி தொடங்க அனுமதி வேண்டும் என ஜானகி கோரிக்கை வைத்தார். அதன்பின் சில நாட்களில் அவர் மறைந்து விட்டார். ஆனாலும் அவர் கோரிக்கையை ஏற்று கலைஞர் அதற்கான அனுமதி அளித்தார், அப்படி உருவானதுதான் இந்த கல்லூரி
எம்ஜிஆர் அவரது தனி இயக்கத்திற்கு (அதிமுகவிற்கு) அளித்த பங்களிப்பு 15 ஆண்டுகள்தான். ஆனால் திமுகவில் அவரது பங்களிப்பு 20 ஆண்டுகள். இதை அவரே சுட்டிக்காட்டி எழுதியிருக்கிறார். எம்ஜிஆர் என்னுடைய பாட்டி அன்னை அஞ்சுகத்திடம் மிகுந்த பாசம் கொண்டவர். அடிக்கடி கோபாலபுர வீட்டிற்கு வருவார். ஒருமுறை அவரை நான் சார் என்று அழைத்து விட்டதற்காக எனது தந்தை கலைஞர் கருணாநிதியிடம் அதை சொல்லி கோபித்து கொண்டார்.
நான் 1971ல் நாடக நடிப்பில் ஈடுபாடு காட்டியது என் தந்தைக்கு கவலை அளித்தது. அப்போது எம்ஜிஆர் என் நாடகத்தை பார்த்து என்னை பாராட்டியதோடு “நீ நடிப்பதை பற்றி நான் கவலைப்படவில்லை. ஆனால் உன் அப்பாவுக்கு இது கவலையளிக்கிறது. அவருக்கு வராத அந்த கல்வி உனக்கு வந்தாக வேண்டும். அதனால் உன் பெரியப்பா என்ற முறையில் சொல்கிறேன். நன்றாக படி என உரிமையோடு எனக்கு அறிவுரை வழங்கியவர் எம்.ஜி.ஆர்” என அவர் கூறியுள்ளார்.
Edit By Prasanth.K