வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : புதன், 20 செப்டம்பர் 2017 (12:08 IST)

ஸ்டாலின் கூறிய ‘அது சஸ்பென்ஸ்’ - திமுக திட்டம் என்ன?

முதல்வர் எடப்பாடி ஆட்சியை கலைப்பதற்காக திமுக எம்.எல்.ஏக்கள் கூண்டோடு ராஜினாமா செய்வீர்களா? என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு மு.க.ஸ்டாலின் ‘அது சஸ்பென்ஸ்’ என பதில் அளித்தார்.


 

 
தினகரனுக்கு ஆதரவாகவும், எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராகவும் குரல் கொடுத்து வரும் 18 எம்எல்ஏக்களை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்தார். இந்த விவகாரத்தில் ஆளுநர் தனது கடமையை செய்ய தவறவிட்டார் என்ற குற்றச்சாட்டும் வைக்கப்படுகிறது. 
 
இந்நிலையில் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்தியாசாகர் ராவ் நேற்று சென்னை வந்தார். அந்த சூழலில் திமுகவின் நிலைப்பாடு குறித்து வதந்தி பரவியது. திமுக எம்எல்ஏக்கள் கூண்டோடு ராஜினாமா செய்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய உள்ளதாக கூறப்பட்டது. 
 
ஆனால் திமுக எம்எல்ஏக்கள் கூண்டோடு ராஜினாமா செய்தால் அரசுக்கு எந்த நெருக்கடியும் ஏற்படாது, மாறாக ஆளும் கட்சிக்கு அது வசதியாக போய்விடும் என கூறப்படுகிறது. இந்த சூழலில் எதிர்க்கட்சி தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. 
 
அந்த கூட்டத்தில், 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் விவகாரத்தில் முதல்வர், சபாநாயகருக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆளுநர், சபாநாயகர், முதல்வர் ஆகியோர் ஜனநாயக விரோத செயலில் ஈடுபடுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 


 

 
கூட்டம் முடிந்த பின் செய்தியாளர்ளிடம் மு.க.ஸ்டாலின் பேட்டியளித்தார். அப்போது ‘எடப்பாடி அரசை கவிழ்ப்பதற்காக திமுக எம்.எல்.ஏக்கள் கூண்டோடு ராஜினாமா செய்வீர்களா?’ என ஒரு நிருபர் கேள்வி எழுப்பினார். 
 
அதற்கு பதிலளித்த ஸ்டாலின்  “உங்கள் ஆலோசனைக்கு நன்றி. நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியான பின்னரே நாங்கள் அடுத்த கட்ட முடிவு குறித்து ஆலோசனை செய்வோம். எனவே, இப்போதே எல்லாவற்றையும் கூற முடியாது. அது சஸ்பென்ஸ்” என தெரிவித்தார். 
அதாவது, திமுக தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. அதனுடனேயே எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்கத்தை எதிர்த்து தினகரன் அணி தொடர்ந்த வழக்கும் சேர்த்து விசாரிக்கப்படுகிறது. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்கம் செல்லாது என நீதிமன்றம் அறிவித்துவிட்டால் திமுக ரூட் கிளியர். அதாவது, நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி அணி தோற்றுவிடும். 
 
மாறாக, சபாநாயகரின் முடிவில் தலையிட முடியாது என நீதிமன்றம் கூறிவிட்டாலோ அல்லது தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் எனக் கூறிவிட்டாலோ, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து திமுக ஆலோசனை செய்யும் எனத் தெரிகிறது.
 
இதற்காகவே, திமுக எம்.எல்.ஏக்களை சொந்த ஊருக்கு செல்லாமல் சென்னையிலேயே தங்கியிருக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.