1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: சனி, 18 ஜூன் 2016 (10:00 IST)

தந்தைக்கும் தனயனுக்கும் உள்ள பிரச்சனையை திசை திருப்புகிறார் ஸ்டாலின்: ஓபிஎஸ் அதிரடி

தமிழக சட்டசபையில் திமுக தலைவர் கருணாநிதி வீல் சேரில் வந்து விவாதங்களில் பங்கேற்க வசதியான இருக்கை ஒதுக்கவில்லை என எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.


 
 
இதற்கு பதில் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவை முன்னவரும் நிதி அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம், கருணாநிதி சட்டமன்ற கூட்டத்திற்கு வீல் சேரில் வந்து உறுதிமொழி எடுத்தார். அப்போது, தற்போது ஒதுக்கப்பட்டிருக்கும் இருக்கைக்கு முன் பக்கத்தில் இருந்து தான் உறுதிமொழி எடுத்தார்.
 
இதனை கருத்தில் கொண்டு தான் சபாநாயகர் கருணாநிதிக்கு இந்த இருக்கையை ஒதுக்கியுள்ளார். கருணாநிதி சட்டப்பேரவைக்கு வந்து விவாதங்களில் பங்கேற்க வேண்டுமென்றால், அவர் உறுதிமொழி எப்படி எடுத்துக்கொண்டாரோ அதே போன்று கலந்து கொள்ள இயலும்.
 
கருணாநிதி சட்டப்பேரவை விவாதங்களில் பங்கேற்பது பற்றி அல்ல இந்த பிரச்சனை. உண்மையிலே இது தந்தைக்கு, தனயனுக்கும் உள்ள பிரச்சனை தான். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக எதிர்கட்சி அந்தஸ்து பெற்றிருக்கிறது.
 
திமுக என்றால் கருணாநிதி தானே. கருணாநிதி தானே கட்சியின் தலைவர். அப்படி இருக்கும் போது சட்டமன்ற கட்சியின் தலைவர் என்ற பதவி அவருக்கு தானே கிடைத்திருக்க வேண்டும். ஆனால், தங்களுக்குள்ள பிரச்சனையில், உட்கட்சி பிரச்சனையில், திமுக சட்டமன்ற கட்சி தலைவராக மு.க.ஸ்டாலின் தன்னை தேர்ந்தெடுக்க செய்துவிட்டார்.
 
திமுக தலைவர் கருணாநிதிக்கு வெறும் சட்டமன்ற உறுப்பினர் அந்தஸ்து தானே வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கருணாநிதி சட்டமன்ற விவாதங்களில் பங்கேற்க மாட்டார் என்ற பழி தன் மீது வந்துவிடக்கூடாது என்பதற்காக மு.க.ஸ்டாலின் பிரச்சனையை திசை திருப்புகிறார் என ஓ.பன்னீர் செல்வம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.