செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 10 ஆகஸ்ட் 2022 (10:45 IST)

போதைப்பொருள் நுழைவதை தடுக்க வேண்டும்! – முதல்வர் தீவிர ஆலோசனை!

தமிழ்நாட்டில் போதைப்பொருட்கள் நுழைவதை தடுக்க கடும் நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

தமிழ்நாட்டில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் ரகசியமாக வெளிமாநிலங்களில் இருந்து குட்கா தமிழகத்திற்குள் கடத்தப்படுவது தொடர்ந்து வருகிறது. சமீபமாக போதைப்பொருள் ஆபரேஷன்களை நடத்தி வரும் காவல்துறை பல குட்கா வாகனங்களை பிடித்துள்ளதுடன், குட்கா, போதை பொருள் விற்பவர்கள் உள்ளிட்டோரையும் கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளது.

இந்நிலையில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் போதைப்பொருள் தடுப்பு குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளார்.

அதில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் “போதை பொருள்கள்தான் சாதி, மத மோதலுக்கு தூண்டுதலாக அமைகிறது. போதையின் பாதையில் செல்லாமல் ஒவ்வொருவரையும் தடுக்கும் கடமை அரசுக்கு உள்ளது. தமிழ்நாட்டிற்குள் போதைப்பொருள் நுழைவதை நாம் முழு ஆற்றலையும் பயன்படுத்தி தடுக்க வேண்டும். போதை பொருள் விற்பவர்களை கைது செய்வதோடு மட்டுமல்லாமல் அவர்களது அனைத்து சொத்துகளையும் முடக்குவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.