திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 13 ஜூலை 2021 (13:01 IST)

சிகிச்சைக்கு காத்திருக்கும் சிறுமி; மருந்துக்கு வரி சலுகை வேண்டும்! – மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை

தமிழகத்தை சேர்ந்த இரண்டு வயது சிறுமிக்கு ஸ்விட்சர்லாந்து மருந்து கிடைப்பதில் வரி சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் வசித்து வரும் சதீஷ் – பிரியதர்ஷினி ஆகியோரின் மகள் இரண்டு வயதான மித்ரா. சமீபத்தில் மித்ராவை உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதித்தபோது குழந்தைக்கு தண்டுவட சிதைவு நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதற்கான தடுப்பு மருந்து ஸ்விட்சர்லாந்தில் தயாரிக்கப்படுகிறது. அதை வாங்க ரூ.16 கோடி தேவைப்படும் என்ற நிலையில் சமூக வலைதளங்கள் மூலமாக நிதி அளிக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. பலர் தாராளமாக நிதி அளித்ததின் பேரில் குழந்தைக்கு மருந்து வாங்குவதற்கான பணம் கிடைத்துள்ளது. ஆனால் மருந்தை இந்தியாவிற்குள் கொண்டு வர ரூ.6 கோடி இறக்குமதி வரி உள்ளதால் மருந்தை வாங்குவதில் சிக்கல் உள்ளது. இந்நிலையில் அம்மருந்துக்கான வரியில் சலுகை அளிக்க பலரும் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் “முதுகெலும்பு தசை செயலிழப்பு சிகிச்சைக்கான உயிர் காக்கும் மருந்துகளை இறக்குமதி செய்யும்போது விதிக்கப்படும், சுங்கவரி, ஜி.எஸ்.டி, இதர வரிகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளார்.

ஒவ்வொரு முறையும் இந்த மருந்தை பெற விலக்கு கேட்பதை விட மொத்தமாகவே விலக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த கடிதத்தை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.