”ஒவ்வொரு துளி ரத்தத்திற்கும் பதில் சொல்ல வேண்டும்”.. ஸ்டாலின் கொந்தளிப்பு
ஜாமியா பல்கலைகழக மாணவர்களிடம் போலீஸார் தடியடி நடத்தியுள்ள நிலையில், சிந்தப்பட்ட ஒவ்வொரு துளி ரத்தத்திற்கும் பதில் சொல்ல வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைகழக மாணவர்கள் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து போராட்டம் நடத்தினர். இதில் மாணவர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டத்தில் வன்முறை வெடித்தது.
வன்முறையில் 3 பஸ்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டது. பின்பு போலீஸார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை வீசியும் வன்முறையில் ஈடுபட்டவர்களை கலைத்தனர்.
இதனை தொடர்ந்து, இரவில் போராட்டக்காரர்கள் போலீஸார் மீது கல்வீசியதாக கூறப்படுகிறது. பின்பு பல்கலைகழக வளாகத்திற்குள் போலீஸார் நுழைந்தனர். இதில் 6 பேர் காயம் அடைந்தனர்.
இதனையடுத்து ஜாமியா பல்கலைகழகத்தில் மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து, அலிகார் முஸ்லிம் பல்கலைகழக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதில் போலீஸாருடன் கைகலப்பு ஏற்பட்டு, மாணவர்கள் கற்களை கொண்டு தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர போலீஸார் கண்ணீர் புகைக்குண்டுகளையும், தண்ணீரையும் பீய்ச்சி அடித்து மாணவர்களை கலைத்தனர். இதனை தொடர்ந்து ஜனவரி 5 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுவதாக பல்கலைகழகம் அறிவித்துள்ளது.
மாணவர்கள் தாக்கப்பட்டதை தொடர்ந்து பல அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில், ”ஜாமியா மாலியா மற்றும் அலிகார் பல்கலைகழக மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்ட காட்சிகளை பார்த்து அதிர்ந்துபோனேன். மாணவர்கள் சிந்திய ஒவ்வொரு துளி ரத்தத்திற்கும் பதில் சொல்லும் நாள் விரைவில் வரும். பாஜக அரசு குடியுரிமை மசோதாவை கண்டிப்பாக மறு பரிசீலனை செய்யவேண்டும்” என கூறியுள்ளார்.