கருணாநிதியை சந்தித்த மு.க.அழகிரி: திமுகவில் பரபரப்பு
திமுக செயல் தலைவராக ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், திமுக தலைவர் கருணாநிதியை அவரது மூத்த மகன் அழகிரி கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்து பேசியது தொண்டர்களிடம் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
திமுக தலைவர் கருணாநிதி கடந்த சில வாரங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். நீர்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் சிகிச்சை முடிந்து இல்லம் திரும்பினார்.
இதனையடுத்து, திமுகவின் பொதுக்குழுக் கூட்டம் கடந்த 04ஆம் தேதி பொதுச்செயலாளர் க.அன்பழகன் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கூட்டப்பட்டது. இந்தக் கூட்டத்தில் மாநிலம் முழுவதும் உள்ள பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், இந்த கூட்டத்தில் திமுக செயல்தலைவராக ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. தலைவருக்கு உள்ள அனைத்து அதிகாரங்களும், செயல் தலைவருக்கு வழங்கப்படுவதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானத்தை பொதுச்செயலாளர் அன்பழகன் முன்மொழிய, துரைமுருகன் வழிமொழிந்தார். திமுகவின் சட்டவிதி 18ல் திருத்தம் செய்யப்பட்டு, அவர் செயல் தலைவராக ஆக்கப்பட்டார்.
இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதியை அவரது மூத்த மகன் முக அழகிரி இன்று கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்து பேசியுள்ளார். செயல் தலைவராக ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அழகிரி மீண்டும் திமுகவில் சேர்த்து கொள்ளப்படலாம் என கூறப்படுகிறது.