1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 31 மே 2022 (12:58 IST)

முழுதாக படித்துவிட்டுதான் முடிவெடுத்து வருகிறோம்! – ஆளுனருக்கு அமைச்சர் பொன்முடி பதில்!

Ponmudi
தேசிய கல்விக் கொள்கையை முழுதாக படித்து பார்க்க வேண்டும் என ஆளுனர் பேசியதற்கு உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி பதில் அளிக்கும் வகையில் பேசியுள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்த புதிய கல்விக்கொள்கை மீது தமிழ்நாடு அரசுக்கு நிறைய முரண்பாடுகள் உள்ள நிலையில், புதிய கல்விக்கொள்கையில் ஏற்புடைய சில அம்சங்களை மட்டுமே ஏற்போம் என தொடர்ந்து வாதிட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைகழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பேசிய தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி “மற்றவர்கள் சொல்வதை கேட்டு புதிய கல்விக் கொள்கை தவிர்க்கப்படுகிறது. புதிய கல்விக்கொள்கை குறித்து யாரும் முழுமையாக படிக்கவில்லை. அதை முழுமையாக படித்து அதிலுள்ள சிறப்புகளை தெரிந்து கொள்ள வேண்டும்” என பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆளுனரின் கருத்து குறித்து பேசிய தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி “ஆளுனர் தேசிய கல்விக் கொள்கை குறித்த அவரது கருத்தை சொல்லியுள்ளார். ஆனால் முதல்வர் கல்வி விவகாரத்தில் மிக தீவிரமாக ஆராய்ந்தே முடிவெடுத்து வருகிறார். தமிழக மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தும் வகையில் சிறப்பான திட்டங்களை வகுக்க தமிழ்நாடு புதிய கல்விக் கொள்கை உருவாக்க ஒரு குழுவையே அமைத்துள்ளார். தேசிய கல்விக் கொள்கையை முழுதாக படித்துவிட்டுதான் கருத்து தெரிவிக்கிறோம்” என விளக்கமளித்துள்ளார்.