புதன், 6 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 28 மே 2020 (13:09 IST)

அவங்க கொடுத்த மனுவுல ஒரு கோரிக்கை கூட இல்ல! – திமுகவை வெளுத்த அமைச்சர் காமராஜ்!

’ஒன்றிணைவோம் வா” என்ற பெயரில் திமுக அளித்த மனுக்களில் ஒரு கோரிக்கை கூட இல்லை என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

கொரோனா தாக்கத்தால் தமிழகம் முழுவது கடந்த இரண்டு மாத காலமாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மக்களின் கோரிக்கைகளை அரசிடம் கொண்டு செல்வதாக திமுக சார்பில் “ஒன்றிணைவோம் வா” இயக்கம் தொடங்கப்பட்டது. இதன்மூலம் லட்சக்கணக்கான கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு டி.ஆர்.பாலு தலைமையில் தலைமை செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதுகுறித்து பேசியுள்ள உணவுத்துறை அமைச்சர் காமராஜ் “’ஒன்றிணைவோம் வா” திட்டத்தின் மூலம் திமுக பெற்ற மனுக்களை தமிழக அரசு ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பியுள்ளது. ஆனால் அதில் திமுகவினர் குறிப்பிட்டது போல முக்கியமான எந்த கோரிக்கையும் இடம்பெறவில்லை. உணவு பற்றாக்குறை போன்ற சில தேவைகள் குறித்த கோரிக்கை மட்டுமே இருந்தன. அவை ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் மீண்டும் ஒருமுறை இந்த கோரிக்கைகளை மறுஆய்வு செய்ய சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு, துறைகளுக்கு மனுக்கள் அனுப்பப்பட்டுள்ளன.

பகல் இரவு பாராது கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் தமிழக அரசு, தற்போது எதிர்கட்சியின அளித்த லட்சக்கணக்கான மனுக்களையும் ஆய்வு செய்து உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. உண்மையாக அதில் லட்சம் மனுக்கள் கூட இல்லை. அந்த மனுக்கள் அதிமுக அரசை குறை கூற வேண்டும் என்றே அளிக்கப்பட்டுள்ளன. புகார் மனுக்களில் உள்ள எண்கள் பல தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக பலர் தெரிவித்துள்ளனர். அரசு மீது போலியான குற்றச்சாட்டுகளை ஸ்டாலின் முன்வைக்கிறார். தரம் தாழ்ந்த அரசியலை ஸ்டாலின் முன்வைக்கிறார்” என்று கூறியுள்ளார்.