இன்று மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார் மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி!
இன்று மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார் மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி!
குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் உள்ள மே 17 இயக்கத்தை சேர்ந்த திருமுருகன் காந்தியை மீண்டும் கைது செய்துள்ளது போலீஸ்.
இலங்கை இறுதிப்போரின் போது தமிழினத்தை காக்க உயிர் நீத்த தமிழர்களுக்கு சென்னை மெரினாவில் மே 17 இயக்கத்தினர் கடந்த மே 21-ஆம் தேதி அஞ்சலி செலுத்த முயற்சித்தனர். இதற்கு அனுமதி அளிக்காத காவல்துறை மே 17 இயக்கத்தின் தலைவர் திருமுருகன் காந்தி உட்பட சிலரை கைது செய்து சிறையில் அடைத்தது.
இதனையடுத்து திருமுருகன் காந்தி உட்பட 4 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தது தமிழக அரசு. இதற்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், வைகோ, சீமான், திருமாவளவன் உள்ளிட்டோர் கடும் கண்டனத்தை தெரிவித்து, அவர் மீதான் குண்டர் சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தினர்.
இந்நிலையில் புழல் சிறையில் உள்ள திருமுருகன் காந்தியை மீண்டும் ஒரு வழக்கில் நேற்று கைது செய்தனர். காவிரி விவகாரத்தில் 2016-ஆம் ஆண்டு தேனாம்பேட்டையில் உள்ள ஐஓசி அலுவலகத்தின் மீது கல் வீசிய வழக்கில் நேற்று கைது செய்ததாக கூறப்பட்டது.
இதனையடுத்து இன்று மீண்டும் ஒரு வழக்கில் அவரை கைது செய்துள்ளது காவல்துறை. கடந்த 2016-ஆம் ஆண்டு பண மதிப்பு நீக்க நடவடிக்கையின் போது போராட்டம் நடத்திய வழக்கில் மே 17 இயக்கத்தை சேர்ந்த திருமுருகன் காந்தியை இன்று மீண்டும் கைது செய்துள்ளது காவல்துறை. புழல் சிறையில் இருக்கும் போதே அவரை மீண்டும் மீண்டும் கைது செய்து வருகிறது காவல்துறை.