திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 1 அக்டோபர் 2024 (17:48 IST)

நாளை கிராம சபை கூட்டம்: மக்கள் நீதி மய்யம் முக்கிய அறிக்கை..!

Makkal Needhi Maiam
காந்தி ஜெயந்தியை ஒட்டி நாளை மாநிலம் முழுவதும் நடைபெற உள்ள கிராம சபை கூட்டத்தில் நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத்தலைவர் தங்கவேலு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
நமது தலைவர் நம்மவர் திரு. கமல் ஹாசன் அவர்கள் உள்ளாட்சிகளின் முக்கியத்துவம் குறித்து தொடர்ந்து வலியுறுத்தி வருவதோடு கிராமசபைக் கூட்டங்களில் பங்கேற்று, இதுகுறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்துவதில்
தனிக்கவனம் செலுத்திவருகிறார். தலைவரின் வலியுறுத்தலைக் களத்தில் செயல்படுத்தும்விதமாக, கடந்த 6 ஆண்டுகளாக ஒவ்வொரு முறையும் கிராமசபைக் கூட்டங்கள் நடக்கும்போதும் மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகளான நாம் அவரவர் பகுதிகளில் நடக்கும் கிராமசபைக் கூட்டங்களில் தொடர்ந்து பங்கேற்று வருகிறோம்.
 
அக்டோபர் 2 காந்தி ஜெயந்தியன்று (02.10.2024) தமிழகமெங்கும் கிராமசபைக் கூட்டங்கள் நடைபெறவுள்ள நிலையில், நமது கட்சியின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் அனைவரும் வழக்கம்போல் கிராமசபைக் கூட்டங்களில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். மேலும் நம்முடன், கிராமப் பொதுமக்களையும் கூட்டத்தில் பங்கேற்கச் செய்து பங்கேற்பு ஜனநாயகத்தினை வலுப்படுத்திட வேண்டும். கூட்டத்தில், கிராம மக்கள் முன்வைக்கும் நியாயமான கோரிக்கைகளானது கிராமசபைத் தீர்மானங்களாக நிறைவேற்றப்படுவதற்குத் துணைநிற்க வேண்டியது நமது கடமையாகும். மேலும், கடந்த காலங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செயல்பாட்டுக்கு வருவதற்கும் நாம் உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். தலைவர் நமக்கு வகுத்தளித்துள்ள இந்த அணுகுமுறையில் நாம் அனைவரும் கிராமசபைக் கூட்டங்களில் பங்கேற்று மக்களின் அடிப்படைத் தேவைகள், பிரச்னைகளைத் தீர்ப்பதற்குத் துணைநிற்போம்.
 
காந்தி ஜெயந்தியன்று (02.10.2024) நடைபெறவுள்ள, கிராம சபைக் கூட்டங்களில் பங்கேற்கும் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள், தங்கள் பங்கேற்பு குறித்தான விவரங்களை, புகைப்படங்களுடன் மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாநிலத் தலைமை நிலையத்திற்கு (வாட்ஸ் அப் எண்: 9342974725) அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்; மேலும், மண்டல செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் நமது நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களின் கிராமசபைப் பங்கேற்பை உறுதிப்படுத்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
 
Edited by Mahendran