திருவண்ணாமலையில் மகாதீபம்.. 25 தற்காலிக பேருந்து நிலையங்கள் ஏற்பாடு..!
திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்பட இருக்கும் நிலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருவார்கள் என்பதால் 25 தற்காலிக பேருந்து நிலையம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
மேலும் தீபத் திருவிழாவை ஒட்டி பக்தர்களுக்கு வழிகாட்டி நெறிமுறைகளை காவல்துறை தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழிகாட்டி நெறிமுறைகளில் கூறியிருப்பதாவது:
திருவண்ணாமலையில் மகா தீபத்தையொட்டி, பக்தர்கள் போக்குவரத்து நெரிசலின்றி வழிபட ஏதுவாக, 12ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை 25 தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், 116 பார்க்கிங் இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.தற்காலிக பேருந்து நிலையங்கள் மற்றும் பார்க்கிங் இடங்கள் தொடர்பாக திருவண்ணாமலை காவல் துறைக்கு வாட்ஸ்ஆப்பில் குறுஞ்செய்தி அனுப்பினால், வரைபடத்துடன் கூடிய தரவுகளை காவல் துறை அனுப்பி வைக்கிறது.
இதனைப் பயன்படுத்தி பக்தர்கள் போக்குவரத்து நெரிசலின்றி தீபத் திருவிழாவில் பங்கேற்கலாம்.வாடகை பேருந்துகள் உள்பட அனைத்து பேருந்துகளும் தற்காலிக பேருந்து நிலையங்களிலேயே நிறுத்த வேண்டும்.
சாலைகளில் வாகனங்களை நிறுத்தி சென்றால் அபராதம் விதிக்கப்படும்.கோயிலின் நான்கு கோபுரங்களின் முன்போ, கிரிவலப் பாதையிலோ பக்தர்கள் கற்பூரம் ஏற்றக் கூடாது.
அனுமதி மறுக்கப்பட்டுள்ள இடங்களில் அன்னதானம் வழங்க கூடாது. மாவட்ட காவல் துறை சார்பில் அனுமதிக்கப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே அன்னதானம் வழங்க வேண்டும் என பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது
Edited by Siva