1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: திங்கள், 21 நவம்பர் 2016 (17:08 IST)

விவசாயிகள் மகிழ்ச்சி - தாமிரபரணியிலிருந்து குளிர்பான ஆலைகள் தண்ணீர் எடுக்க தடை

தாமிரபரணி ஆற்றிலிருந்து குளிர்பான ஆலைகளுக்கு தண்ணீர் வழங்கத் தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.


 

 
தமிழகத்தின் ஐந்து மாவட்டங்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் தாமிரபரணி ஆற்றிலிருந்து குளிர்பான ஆலைகளுக்குத் தண்ணீர் வழங்கப்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று கூறி நெல்லையைச் சேர்ந்த பிரபாகர் என்பவர் பொதுநல வழக்கு ஒன்றினைத் தொடுத்திருந்தார். 
 
மேலும், தாமிரபரணி ஆற்றை ஒட்டிய பகுதிகளுக்கே 3 நாட்களுக்கு ஒருமுறை குடிதண்ணீர் விநியோகிக்கப்படும் நிலையில், குளிர்பான நிறுவனங்களுக்கு தினசரி லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் வழங்கப்படுவதாகவும் மனுதாரர் குறிப்பிட்டிருந்தார். அதேபோல, தாமிரபரணி ஆற்றிலிருந்து எடுக்கப்படும் 1,000 லிட்டர் நீருக்கு குளிர்பான நிறுவனங்கள் ரூ.37.50 மட்டுமே கட்டணமாகச் செலுத்துவதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது. 
 
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், தாமிரபரணி ஆற்றிலிருந்து குளிர்பான நிறுவனங்களுக்கு தண்ணீர் வழங்க தடை விதித்து இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.