முக்குலத்தோர் புலிப்படையிலிருந்து கருணாஸ் நீக்கம் - இது புதுசு..
முக்குலத்தோர் புலிப்படை கட்சியிலிருந்து அதன் தலைவர் கருணாஸை நீக்கி அந்த கட்சியின் நிர்வாகிகள் உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
நடிகர் கருணாஸ் முக்குலத்தோர் புலிப்படை என்ற அமைப்பை நடத்தி வருகிறார். 2016ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில், அதிமுகவுடன் கூட்டணி அமைத்து, இரட்டை இலை சின்னத்தில் திருவாடானை தொகுதியில் நின்று வெற்றி பெற்றார்.
ஜெ.வின் மறைவிற்கு பின், சசிகலாவிற்கு எதிராக ஓ.பி.எஸ் களம் இறங்கிய பின் அதிமுகவில் பிளவு ஏற்பட்டு இரு அணிகளிகாக உடைந்தது. அப்போது, தன்னை சசிகலாவின் ஆதரவாளராக செயல்பட்டார்.
அந்நிலையில், முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் நிர்வாகிகளை கூண்டோடு அவர் கடந்த 24ம் தேதி நீக்கினார். அந்த அமைப்பில், அதிகாரபூர்வ அனுமதிக் கடிதம் இன்றி பலர் நிர்வாகிகளாக செயல்பட்டதால் அவர்கள் அனைவரும் நீக்கப்பட்டுள்ளனர் என செய்திகள் வெளியானது. அந்த அமைப்பின் மாவட்ட, ஒன்றிய, நகர புதிய நிர்வாகிகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் எனவும் கருணாஸ் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், முக்குலத்தோர் புலிப்படையிலிருந்து கருணாஸை நீக்கி விட்டதாக, கருணாஸால் நீக்கப்பட்ட மாநில நிர்வாகிகள் கூறியுள்ளனர்.
இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள கருணாஸ், “நான் ஏற்கனவே அனைத்து நிர்வாகிகளையும் நீக்கி விட்டேன். எனவே, என்னை நீக்கும் அதிகாரம் யாருக்கும் கிடையாது” என கருத்து தெரிவித்துள்ளார்.