வியாழன், 10 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: திங்கள், 4 ஜூலை 2016 (21:11 IST)

பொது சிவில் சட்டம்; குளவிக் கூட்டிற்குள் கையை விடுவதற்கு ஒப்பானது : கருணாநிதி

பொதுசிவில் சட்டத்தை கொண்டு வரும் முயற்சியில் மத்திய அரசு  ஈடுபட்டுள்ளது. இதுபற்றி திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:


 

 
2-7-2016 அன்று தமிழ் நாளேடுகளில் ஒரு செய்தி! பொது சிவில் சட்ட விவகாரத்தை சட்ட ஆணையத்தின் ஆய்வுக்காக மத்திய அரசு அனுப்பியுள்ளது என்பதே அந்தச் செய்தி! இது தொடர்பாக சட்ட ஆணையத்துக்கு மத்திய சட்டத் துறை அமைச்சர் சதானந்த கௌடா எழுதி யிருக்கும் கடிதத்தில், பொது சிவில் சட்டத்தை ஆய்வு செய்து அறிக்கை அனுப்பும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.
 
சதானந்த கௌடா அவர்கள் சில நாட்களுக்கு முன் செய்தியாளர்களிடம் பேசும்போது, “பொது சிவில் சட்டம் குறித்து ஒருமித்த கருத்து ஏற்படுத்து வதற்காக பல்வேறு தரப்பினருடனும் விரிவான ஆலோசனை நடத்தவேண்டியுள்ளது. இதை ஒரு சில நாட்களில் செய்து முடிக்க முடியாது. சில காலம் ஆகலாம்” என்றும் தெரிவித்திருந்தார்.
 
முஸ்லீம் மதத்தில் விவாக ரத்து செய்யும் “தலாக்” நடைமுறையை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணையில், உச்ச நீதிமன்றம், அண்மையில் கருத்து தெரிவித்த போது, தலாக் முறைக்கு அரசமைப்பு ரீதியில் முக்கியத்துவம் உள்ளதா என்பது குறித்து முடிவெடுப்பதற்கு முன்பு, அது தொடர்பாக விரிவான விவாதம் நடத்தப்பட வேண்டும் எனக் கூறியது.
 
இதற்கிடையே நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்பட வேண்டுமென்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நீண்ட காலமாகவே வலியுறுத்தி வருகிறது. அனைவருக்கும் பொதுவான ஒரே சிவில் சட்டம் கொண்டுவர வேண்டும் என்பது பாரதீய ஜனதா கட்சியின் விருப்பம். இதை கொண்டு வந்து நடைமுறைப் படுத்துவோம் என அந்தக் கட்சி, தேர்தல் அறிக்கை களில் குறிப்பிட்டுள்ளது.
 
ஆனால் 1998-ம் ஆண்டும், 1999-ம் ஆண்டும் நாடாளுமன்றத் தேர்தல்களின் போது பாரதீய ஜனதா கட்சி பல்வேறு சர்ச்சைக்குரிய பிரச்சினைகளுடன், இந்த பொது சிவில் சட்ட பிரச்சினை யையும் கிடப்பில் போட்டது என்பது குறிப்பிடத் தக்கதாகும். இந்த நிலையில், தற்போது மத்தியில் பா.ஜ.க. அரசு அமைந்த பிறகு, சட்ட ஆணையத் துக்கு பொது சிவில் சட்டம் குறித்து அதிகாரப் பூர்வமாக முதல் முறையாகக் கடிதம் எழுதப்பட் டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக அனைவராலும் கருதப்படுகிறது.
 
உத்தரப்பிரதேச மாநில சட்டசபைத் தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு, இந்த விவகாரத்தை சட்டக் கமிஷனின் ஆய்வுக்கு மத்திய அரசு விட்டுள்ளதோ என்ற அய்யப்பாடு அனைத்துத் தரப்பிலும் எழுந்துள்ளது. 
 
காஷ்மீருக்கு சிறப்புத் தகுதி வழங்கும் அரசியல் சட்டத்தின் 370வது பிரிவை நீக்குதல், அயோத்தியில் பாபர் மசூதி இடத்தில் ராமர் கோயில் கட்டுதல், பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வருதல் ஆகிய முப்பெரும் கோரிக்கையை பா.ஜ.க. நீண்ட நெடுங் காலமாக முழங்கி வருகிறது. 
 
2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப் பதிவு முடிந்த பிறகு வெளியான பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையிலும், பொது சிவில் சட்டம் கொண்டு வருவோம் என்ற வாக்குறுதி இடம் பெற்றிருந்தது. ஆனால் இதுதான் நாங்கள் கொண்டுவரவுள்ள பொது சிவில் சட்டத்தின் வரைவு என்று எதையுமே பா.ஜ.க.வோ, அதன் தலைமையில் அமைந்துள்ள அரசுகளோ இதுவரை முன் வைத்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
2004ஆம் ஆண்டிலே நடைபெற்ற நாடாளு மன்றத் தேர்தல் அறிக்கையிலேயே திராவிட முன்னேற்றக் கழகம் “தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் கழகம் பங்கேற்றி ருந்த காலத்திலேயே, பொது சிவில் சட்டம் நடைமுறைப் படுத்தப்படுவது - அரசிய லமைப்புச் சட்டப் பிரிவு 370ஐ நீக்குவது போன்ற சிறுபான்மைச் சமூகத்தினரின் நலன்களுக்கு எதிரான செயல் பாடுகளைத் தடுத்ததோடு, அயோத்தி பிரச்சினையில் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும் என்பதையும் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளது” என்று குறிப்பிட்டிருக்கிறோம். 
 
2004ஆம் ஆண்டில் மாத்திரமல்ல; தி.மு. கழகம் வெளியிட்ட 2009ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கை யிலும், 2014ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையிலும் “மதச்சார்பின்மை” என்ற தலைப்பின் கீழ் பொது சிவில் சட்டம் பற்றி விரிவாகக் குறிப்பிட்டிருக்கிறோம்.
 
உண்மையில் நம் நாட்டின் உரிமையியல் சட்டங் களில் 99 சதவிகிதம் எல்லோர்க்கும் பொதுவான சட்டங்களாகவே உள்ளன. தொழில் நடத்துதல், கொடுக்கல் வாங்கல், வாடகை, சொத்து விற்பனை உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளில் அனைவருக் கும் பொதுவான சட்டங்களே பின்பற்றப்படுகின்றன. எடுத்துக்காட்டாக ஒரு முஸ்லிம், வங்கியில் வாங்கிய கடனை முறையாகத் திரும்பச் செலுத்தாத நிலையில், வட்டியுடன் கடன் தொகை அதிகரித்து, வழக்கு மன்றத்துக்குப் போகும்போது, இஸ்லாம் மார்க்கத்தில் வட்டி வாங்குவதும், கொடுப்பதும் தடை செய்யப்பட்டுள்ளதால், வங்கியில் வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்த முடியாது என வாதிட முடியாது.
 
திருமணம், மணவிலக்கு, வாரிசுரிமை, வக்ப் சொத்துக்களின் நிர்வாகம் இவற்றில் மட்டும்தான் முஸ்லீம்களுக்கு மார்க்க அடிப்படையிலான தனியார் சட்டங்களை இந்திய அரசியல் சாசனம் அனுமதித்துள்ளது. முஸ்லீம்களுக்கு மட்டுமே தனியார் சட்டம் இருப்பது போல கருதுவது உண்மைக்கு மாறானது.
 
இந்துக்களுக்கும், சீக்கியர்களுக்கும், இன்ன பிற பிரிவினர்களுக்கும் அவர்களுக்கென சிறப்புத் தனியார் சட்டங்கள் இந்திய அரசியல் சாசனத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
 
1948ஆம் ஆண்டு அரசியல் நிர்ணய அவையில் சமயச் சுதந்திரம் தொடர்பான விவாதம் நடந்த போது தனியார் சட்டங்கள் இல்லை என்றால், இந்திய அரசியல் சாசனத்தின் 25 (எ) பிரிவான விரும்பிய சமயத்தைத் தேர்வு செய்தல், பின்பற்றுதல், பரப்புரை செய்தல் ஆகிய உரிமைகள் அர்த்தமற்றுப் போவதை எடுத்துரைத்து தனியார் சட்டங்களை அரசியல் சாசனம் ஏற்பளிப்புச் செய்ய கண்ணியத்திற் குரிய காயிதே மில்லத் அவர்கள் காரணமாக இருந்தார்.
 
தனியார் சட்டங்கள் நம் நாட்டில் மட்டும்தான் நடைமுறையில் உள்ளனவா என்றால் இல்லை. புத்த நாடான தாய்லாந்திலும், சிங்களப் பேரினவாத இலங்கை யிலும் கூட தனியார் சட்டங்கள் உள்ளன. வங்க தேசம், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலும், எத்தியோப்பியா, உகாண்டா, கிரீஸ் ஆகிய நாடுகளிலும் தனியார் சட்டங்கள் நடைமுறையில் உள்ளன. இது அந்த நாடுகளின் ஒருமைப்பாட்டுக்கு எந்த வகையிலும் ஊறு செய்யவில்லை.
 
இந்தியாவிற்கும், உலகில் ஏனைய நாடுகளுக்கும் உள்ள மிக முக்கியமான வேறுபாடு நம் நாட்டின் பன்முகத்தன்மையாகும். வேற்றுமையில் ஒற்றுமை (Unity in Diversity) என்பது நமது வேர்க் கொள்கை. இதை மிகச் சரியாக உணர்ந்திருந்த நமது முன்னோர் சட்டங்களிலும், அதைப் பிரதிபலிக்கச் செய்துள்ளனர். 
 
இந்திய அரசமைப்புச் சட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள வழிகாட்டு நெறி முறைகளைப் பொறுத்த வரை நீதிமன்றங்கள் இதை வலியுறுத்த முடியாது. வழிகாட்டு நெறிமுறைகளை நிறைவேற்றுமாறு வழக்கும் போட முடியாது. 
 
பாரதிய ஜனதாவின் தேர்தல் அறிக்கை பாலின சமத்துவத்துக்காக பொது சிவில் சட்டம் கொண்டு வருவோம் என்கிறது. ஆனால் பொது சிவில் சட்டத்தை முஸ்லிம் மக்களும் சமூக நீதியாளர்களும், சாதி மத நல்லிணக்கம் வேண்டுவோரும் நீண்டகாலமாகவே கடுமையாக எதிர்த்து வருகின்றனர். இந்தியாவில் பின்பற்றப்பட்டு வரும் கிரிமினல் சட்டம், தண்டனைச் சட்டம் எல்லாம் இங்கே அனைவர்க்கும் பொதுவாகத் தான் இருக்கின்றன. சிவில் சட்டத்தில் விவாகரத்து, தத்து எடுத்தல், சொத்துரிமை ஆகிய வற்றில் மட்டும் சில வேறுபாடுகள் மத அடிப்படையில் இங்கே அங்கீகரிக்கப்பட்டுள்ளன. 
 
பலவிதமான மொழி, பண்பாடு மதம், சாதி எனப் பன்னெடுங் காலமாகக் கொண்டிலங்கும் இந்திய மக்கள் குழுமங்களிடையே பொது சிவில் சட்டம் சாத்தியமல்ல. இந்துக்களிடையே கூட ஒரு சாதி மக்களின் பழக்க வழக்கங்கள் மற்றொரு சாதியுடன் முழுமையாக ஒத்துப் போவதில்லை. எடுத்துக் காட்டாக சில சாதியினர் மத்தியில் எளிதில் விவாகரத்தும் மறுமணமும் அனுமதிக்கப்படு கின்றன. சில சாதிகளில் அவை தடை செய்யப் பட்டுள்ளன.
 
இந்நிலையில் பல்வேறு மதங்களையும் சாதி களையும் உள்ளடக்கிய பொதுசிவில் சட்டம் என்பது செயல் வடிவம் பெற முடியாதது மட்டுமல் லாமல், கற்பனைக்கும் ஒவ்வாத கருத்தியலாகும். 
 
இந்த நாடு என்னுடையது; என்னுடைய அடிப்படையான, மத, பண்பாட்டு, மொழி உரிமைகள் எதுவும் புறக்கணிக்கப்படவில்லை; அந்த உரிமைகள் இந்த நாட்டின் சட்டத்தாலும், அரசாலும், நீதிமன்றங்களாலும் நிச்சயம் பாதுகாக் கப்படும் என்கிற உணர்வு ஒவ்வொரு குடிமகனுக் கும் உறுதியாகும்போதுதான், இந்த நாட்டின் மீதும், அதன் ஒருமைப்பாட்டின் மீதும் இயல்பாகவே நம்பிக்கை ஏற்படும். மாறாக பொதுசிவில் சட்டம் போன்றவற்றின் மூலம் அந்த உரிமைகள் மறுக்கப்பட்டு உணர்வுகள் காயப்படுத்தப்படும் போதுதான், இது நமது நாடுதானா என்கிற அய்யம் எவருக்கும் ஏற்படும்.
 
ஆகஸ்ட் 20, 1972ஆம் ஆண்டு தீனதயாள் உபாத்யாய ஆராய்ச்சிக் கழகத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய போது, “பாரத ஒற்றுமையைப் பாதுகாக்க பொது சிவில் சட்டம்தான் கருவி யாகும் என்பது தவறு; இயற்கைக்கு எதிரானது; விபரீத விளைவுகளை உண்டாக்கக்கூடியது” என்று பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். பிதாமகர்களில் முக்கியமானவரான குரு கோல்வால்கர் கூறி யிருப்பது 21-8-1972 தேதியிட்ட “மதர் லாண்ட்” பத்திரிகையில் வெளி வந்துள்ளது. நடை முறைக்குகந்த இந்த நல்ல கருத்தை மத்திய பா.ஜ.க. ஆட்சியினர் மனதிலே கொள்ள வேண்டுமென விரும்புகிறேன். 
 
பொது சிவில் சட்டம் குறித்து முதலில் அனைத்து அரசியல் கட்சிகளிடமும், நாட்டின் அனைத்து தரப்பினரிடமும் கருத்தொற்றுமை ஏற்படுத்தப்பட வேண்டும். உண்மையில் சொல்லப் போனால், இந்த விவகாரத்தில் சட்டக் கமிஷனின் பரிந்துரையைப் பெறுவது மட்டும் முக்கியமல்ல. பல்வேறு சமயங்கள் மற்றும் சாதிகளிடையே தலைமுறை தலைமுறையாகப் பின்பற்றப்பட்டு வரும் நெறிமுறைகளையும், நெடுங்காலப் பழக்க வழக்கங்களையும் ஒருங்கிணைத்து அனைவர்க்கும் பொது வானதொரு சிவில் சட்டத்தை ஏற்படுத்து வது என்பதும் எளிதான காரியமல்ல.
 
நமது நாட்டில், தீர்வு காணப்பட வேண்டிய பிரச்சினைகள் ஆயிரம் இருக்கும்போது; பொரு ளாதாரச் சீர்திருத்தங்கள், நீதித் துறைச் சீர்திருத்தங்கள் எனப் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் நாள்தோறும் பெருகி வரும் போது; பொது சிவில் சட்டம் என்னும் முன்னுரிமை இல்லாத - சிக்கலான பிரச்சினையைக் கையிலெடுக்க முயற்சிப்பது குளவிக் கூட்டிற்குள் கையை விடுவதற்கு ஒப்பானதாகும்!
 
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.