செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 13 நவம்பர் 2019 (09:42 IST)

தமிழிசை வாபஸ் பெற்றாலும், வழக்கை தொடரலாம்: நீதிமன்ற உத்தரவால் கனிமொழி அதிர்ச்சி

தூத்துகுடி தொகுதியின் திமுக எம்.பி. கனிமொழியின் வெற்றிக்கு எதிராக தமிழிசை சவுந்தரராஜன் வழக்கு தொடர்ந்திருந்த நிலையில் அவர் தற்போது தெலுங்கானா மாநில கவர்னராகிவிட்டதால் அந்த வழக்கை வாபஸ் பெற்றார். இருப்பினும் அந்த வழக்கை வாக்காளர் என்ற முறையில் வழக்கறிஞர் முத்துராமலிங்கம் தொடர்ந்து நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதால் கனிமொழி தரப்பு அதிர்ச்சி அடைந்திருப்பதாக கூறப்படுகிறது
 
கனிமொழிக்கு எதிரான வழக்கை தமிழிசை செளந்திரராஜன் வாபஸ் பெற்றபோதிலும் அந்த வழக்கை, வாக்காளர் என்ற முறையில் தமிழிசைக்குப் பதிலாக தொடர்ந்து நடத்த தனக்கு அனுமதி தர வேண்டும் என்று  கோரி ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த முத்துராமலிங்கம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனு விசாரணைக்கு வந்தபோது கனிமொழி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரிச்சர்ட்ஸன் வில்சன், ‘‘தற்போது இந்த மனுவை தாக்கல் செய்துள்ள மனுதாரர் தூத்துக்குடி மாவட்ட பாஜக வழக்கறிஞர் அணி தலைவராக இருப்பதாகவும், தமிழிசைக்காக தேர்தல் பிரச்சாரம் செய்துள்ளதாகவும், இந்த தகவல்களை எல்லாம் மறைத்து மனுவை தாக்கல் செய்துள்ள இவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் வாதிட்டார்.
 
மனுதாரர் முத்துராமலிங்கம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சீனிவாசன், ‘இந்த வழக்கு தொடர்பாக தொகுதி வாக்காளர் என்ற முறையில்தான் மனுதாரர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளதாகவும், வழக்குக்கு தொடர்பான ஆவணங்களை மட்டும்தான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவுகள் உள்ளதே தவிர, வழக்குக்கு தொடர்பில்லாத விஷயங்களை சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் எனவே இந்த வழக்கை தமிழிசைக்குப் பதிலாக முத்துராமலிங்கம் தொடர்ந்து நடத்த அனுமதியளிக்க வேண்டும் என்றும் வாதிட்டார்.
 
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ‘மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி தேர்தல் வழக்கு தொடர்ந்த நபர் அந்த வழக்கை திரும்பப் பெற்றால், அவருக்குப் பதிலாக அந்த வழக்கை தொகுதிக்கு சம்பந்தப்பட்ட வேறு யாரும் தொடர்ந்து நடத்தலாம். எனவே கனிமொழிக்கு எதிராக தமிழிசை தொடர்ந்த வழக்கை மனுதாரரான முத்துராமலிங்கம் தொடர்ந்து நடத்தலாம்’’ என அனுமதியளித்து உத்தரவிட்டார். இந்த உத்தரவால் கனிமொழி மீதான் வழக்கு தொடர்ந்து விசாரணை செய்யப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது