1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : செவ்வாய், 24 ஜனவரி 2017 (13:15 IST)

போலீசாருக்கு புத்தி சொல்லப்போவது யார்? - கமல்ஹாசன் காட்டம்

ஜல்லிக்கட்டு வேண்டி அமைதியான முறையில் போராடிய போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்திய விவகாரத்தை நடிகர் கமல்ஹாசன் கண்டித்துள்ளார்.


 

 
ஜல்லிகட்டுக்கு அனுமதி வேண்டும் என மதுரை அலங்காநல்லூர், சென்னை, கோவை, திருச்சி, சேலம் உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கடந்த ஒரு வார காலமாக போராட்டம் நடத்தி வந்தனர்.  
 
இந்நிலையில், நேற்று காலை அதிகாலை முதல் சென்னை, மதுரை உட்பட போராட்டம் நடைபெறும் அனைத்து இடங்களில் இருந்தும், போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். வெளியேற மறுத்துவர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி வெளியேற்றினர்.  சென்னையின் திருவல்லிக்கேனி, ஐஸ் ஹவுஸ், ஆயிரம் விளக்கு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மீது போலீசார் தடியடி தாக்குதல் நடத்தினர். 
 
மதுரை அலங்காநல்லூரில் போராடி வந்த பொதுமக்களையும் போலீசார் தாக்குதல் நடத்தினர்.
 
போலீசாரின் நடவடிக்கைக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதுபற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் நேற்று கருத்து தெரிவித்திருந்த நடிகர் கமல்ஹாசன் “அலங்காரநல்லூரை அலங்கோலமாக்கிய வன்முறை தமிழக  அறபோராட்டச் சரித்திரத்தில் பெரிய ரத்தக்கரை” என ஒரு பதிவிலும்,  “இது மிகவும் தவறான ஒன்று. மாணவர் மீது போலீசாரின் அடக்குமுறை நல்ல முடிவை கொண்டு வராது” எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
 
போலீசாரின் நடவடிக்கை குறித்து நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், கருத்து கூறிய நீதிபதி, போலீசாரின் தாக்குதலை கண்டித்தார். இந்நிலையில் இது பற்றி கருத்து தெரிவித்துள்ள கமல்ஹாசன் “ நன்றி கனம் நீதிபதிகளே. நீதியும்! சட்டமும்  தன்னை நிலை நிறுத்திக்கொண்டன. நீதியின் காவலர்க்கு புத்தியோ நீதியோ சொல்லப்போவது யார்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
 
அதேபோல், நேற்று நடந்த கலவரத்தில் ஒரு காவல் அதிகாரி ஒருவரே ஆட்டோ ஒன்றுக்கு தீ வைக்கும் வீடியோ வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அந்த வீடியோவை பதிவிட்டு “இது என்ன.. தயவு செய்து யாராவது விளக்குங்கள்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.