1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : செவ்வாய், 17 ஜனவரி 2017 (16:18 IST)

ஜெயலலிதாவின் சிகிச்சை முழுவதும் வீடியோவாக உள்ளதாக தகவல்!

ஜெயலலிதாவின் சிகிச்சை முழுவதும் வீடியோவாக உள்ளதாக தகவல்!

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22-ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு டிசம்பர் மாதம் 5-ஆம் தேதி மரணமடைந்தார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக இன்றளவும் பொதுமக்கள் பேசி வருகின்றனர்.


 
 
மருத்துவமனையில் ஜெயலலிதாவின் அருகில் இருந்து கவனித்துக்கொண்ட அவரது தோழி சசிகலா மீது ஜெயலலிதா மரணம் குறித்து பலரும் குற்றச்சாட்டுகளை வைத்தனர். கடைசி வரை ஜெயலலிதாவின் புகைப்படத்தை வெளியிடாததால் சசிகலா மீது பல்வேறு விமர்சனங்கள் வருகின்றன.
 
ஒரு கட்டத்தில் சசிகலா தான் ஜெயலலிதாவை கொலை செய்தார் என பொதுமக்கள் பேச ஆரம்பித்தனர். ஆனால் தன் மீது வைக்கப்பட்ட எந்த விமர்சனத்துக்கும் சசிகலா பதில் அளிக்காமல் மௌனமாகவே இருந்தார்.
 
இந்நிலையில் முதன் முறையாக தன் மனைவி சசிகலா மீது வைக்கப்பட்டுள்ள விமர்சனத்துக்கு பதில் கூறியுள்ளார் அவரது கணவர் நடராஜன். தஞ்சையில் நடந்த பொங்கல் விழாவில் பேசிய போது தான் இதற்கு பதில் அளித்தார் நடராஜன்.
 
அப்போது பேசிய அவர், ஜெயலலிதாவை கொலை செய்து விட்டதாக கூறுபவர்களுக்கு வெட்கமில்லையா? என்று கேட்ட நடராஜன், ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முழுவதும் வீடியோவாக பதிவு செய்யப்பட்டிருப்பதாக கூறினார்.
 
ஜெயலலிதாவை 36 ஆண்டு காலம் எனது மனைவி தோளில் சுமந்தார் அவரைப் போய் ஜெயலலிதாவை கொலை செய்து விட்டார் என்று அவதூறு பரப்புகின்றனர். மருத்துவமனையில் ஜெயலலிதா தெளிவான சிந்தனையோடு இருந்தார் எனவும் கூறினார் நடராஜன்.