திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 20 டிசம்பர் 2017 (12:15 IST)

ஜெ.வின் வீடியோ போயஸ் கார்டனில் எடுக்கப்பட்டதா? - எழுப்பப்படும் கேள்விகள்

மறைந்த முதல்வர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது எடுக்கப்பட்ட வீடியோவை தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ வெற்றிவேல் தற்போது வெளியிட்டுள்ளார். 

 
20 நிமிடம் ஓடும் இந்த வீடியோவில் ஜெயலலிதா நைட்டி அணிந்த நிலையில், பழச்சாறு பருகியபடி தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருக்கிறார்.  ஜெ.வின் மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்ட நிலையில், முதன் முதலாக தினகரன் தரப்பில் இருந்து இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. மேலும், தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு ஜெ. மாற்றப்பட்ட போது இந்த வீடியோ எடுக்கப்பட்டது என வெற்றிவேல் தெரிவித்துள்ளார்.
 
இந்நிலையில், இந்த வீடியோ பற்றி பல சந்தேகங்கள் எழுவதை தவிர்க்கமுடியவில்லை. அந்த வீடியோவில் உள்ள அறையின் பக்கவாட்டில் மரங்கள் தெரிகிறது. ஜெ. அனுமதிக்கப்பட்டிருந்தது அப்போலோ மருத்துவமனையின் இரண்டாம் தளத்தில். அங்கு அவ்வளவு உயரமான மரங்கள் கிடையாது என சிலர் கூறுகிறார்கள். ஆனால், அந்த மரங்கள் போயஸ் கார்டனில் உள்ள ஜெ.வின் வீட்டில் இருக்கிறது. போயஸ்கார்டன் இல்லத்தில் முதலாம் மாடியில்தான் ஜெ.வின் அறை இருக்கிறது. 
 
அதேபோல், அப்போலோ மருத்துவமனையில் உள்ள நோயாளிகளின் அறையில் உள்ள அனைத்து பொருட்களிலும் அந்த மருத்துவமனையின் குறியீடு இருக்கும். ஆனால், வெளியாகியுள்ள வீடியோவில் அப்படி எதுவும் இல்லை. அதோடு, மருத்துவமனையில்  ஜெயலலிதா மிகவும் சீரியஸான நிலையில்தான் அனுமதிக்கப்பட்டார் என அப்போலோ பிரதாப் ரெட்டியும் கூறியிருந்தார்.
 
எனவே, இந்த வீடியோ போயஸ்கார்டன் இல்லத்தில் ஜெ.விற்கு சிகிச்சை அளிக்கப்பட்ட போது  எடுக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. ஏனெனில், போயஸ்கார்டனிலும் இதுபோன்ற சிகிச்சை செட்டப் இருப்பதாக கூறப்படுகிறது. ஒருவேளை அப்போலோ மருத்துவமனையிலிருந்து போயஸ்கார்டனுக்கு அவரை கொண்டு வந்து சிகிச்சை அளிக்கப்பட்ட போதோ அல்லது அப்போலோ கொண்டு செல்லப்படுவதற்கு முன்பே அவருக்கு கார்டனில் சிகிச்சை அளிக்கப்பட்ட போதே இந்த வீடியோ எடுக்கப்பட்டிருக்கலாம் என சிலர் கூறி வருகின்றனர்.
 
இதே சந்தேகத்தை விடுதலை சிறுத்தை தொல். திருமாவளவனும் எழுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெ.வின் மரணம் தொடர்பாக எழுந்த சந்தேகம் தற்போது வெளியான வீடியோவிலும் தொடர்கிறது.