திங்கள், 7 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: புதன், 11 மே 2016 (13:13 IST)

இதுதான் திமுக, அதிமுக கட்சிகளின் தவ வாழ்வா?

ஊழல் குற்றச்சாட்டுகளில் சிறைத்தண்டனை பெற்ற திமுக, அதிமுகவினர் கூறும் தவ வாழ்வு எது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தினசரி நாளேடான தீக்கதிர் கேள்வி எழுப்பியுள்ளது.
 

 
இது குறித்து அந்த நாளிதழ் வெளியிட்டுள்ள தலையங்கத்தில், “அதிமுக, திமுக இரண்டு கட்சிகளும் ஊழல் செய்து சொத்து சேர்த்து வழக்குகளில் சிக்கியிருக்கின்றன. ஜெயலலிதாவும் தண்டனை பெற்றியிருக்கிறார். திமுக தலைவரின் மகள் கனிமொழியும், ஆ.ராசாவும் சிறைப்பட்டிருந்தனர்.
 
தங்களின் கறைபடிந்த கரங்களை தூய்மைப்படுத்திக் கொள்ள முடியாததால் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டுவது தொடர்கிறது. ஆனாலும் தங்களைத்தவிர மற்றவர்கள் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது; இருகட்சி ஆட்சி முறையிலிருந்து மக்களை மனம் திரும்பிவிடக்கூடாது என்பதற்காகவே இத்தகைய தவவாழ்வு போட்டியில் தற்போது திமுக பொருளாளர் ஸ்டாலினும் இறங்கியிருக்கிறார்.
 
அதுமட்டுமின்றி ஜெயலலிதா தனது போயஸ்தோட்ட இல்லத்தை அல்ல, கோடநாடு இல்லத்தை தானம் செய்வாரா என்றும் ஸ்டாலின் கேட்டிருக்கிறார். இது தெனாலிராமன் கதை மாதிரிதான். ஆயிரம் ஏக்கர் கோடநாடு தோட்டமும் இவரது தந்தையின் வீடும் ஒன்றாகிவிடுமா என்ன?
 
அது இருக்கட்டும். முதல்வராக, அமைச்சர்களாக இருப்பவர்கள் எளிமையானவர்களாக, எளிதில் சந்திக்கக் கூடியவர்களாக, நேர்மையானவர்களாக, ஊழல் கறைபடியாதவர்களாக, தூய்மையானவர்களாக இருக்க வேண்டியதுதானே முக்கியம். அப்படி இந்த நாட்டில் பலமுதல்வர்களும் அமைச்சர்களும் இருந்திருக்கிறார்களே! இன்னும் இருக்கிறார்களே!
 
முதல்வர் இல்லத்தை காலி செய்துவிட்டுப் போகும் போது தனது உடைமையாக இரண்டு பெட்டிகளை மட்டும் எடுத்துக் கொண்டு சென்ற நிருபன் சக்கரவர்த்தியைப் புகழ்ந்து“அதிசயம் ஆனால் உண்மை” என்று பத்திரிகைகள் பாராட்டினவே. அதுபோன்ற முதல்வர்களாக இஎம்எஸ்நம்பூதிரிபாட், ஜோதிபாசு, மாணிக் சர்கக்hர்... என்றுநீண்ட பட்டியலே இருக்கிறதே. அவர்கள் அல்லவா உண்மையான மக்கள் தொண்டர்கள்! அது அல்லவா தவ வாழ்வு!
 
எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றுமறியேன் என்ற தாயுமானவர் வாழ்ந்தது தவவாழ்வு. வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடியதும் ஆருயிர்க்கெல்லாம் நான்அன்பு செய்தல் வேண்டும் என்று வள்ளலார் கூறியதும் தவவாழ்வு.
 
பதவியின் மேல் பற்று வைத்து அதற்காக இலவசங்கள் எனும் ஆசை வார்த்தைகள் கூறி அப்பாவி பொதுமக்களை ஏமாற்றி மீண்டும் ஆட்சியில் அமரத் துடிப்பதுவா தவவாழ்வு?’ என்று கேள்வி எழுப்பியுள்ளது.