வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 29 செப்டம்பர் 2023 (14:59 IST)

10 நகரங்களில் தகவல் தொழில்நுட்ப பூங்கா! – அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி!

palanivel
சென்னை, ஒசூர், கோவை உள்ளிட்டு தமிழ்நாட்டில் 10 இடங்களில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என மதுரையில் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேட்டி அளித்துள்ளார்.


 
இந்திய தொழில் கூட்டமைப்பின் சார்பில் 6 வது "கனெக்ட் மதுரை 2023" தகவல் தொழில்நுட்பத்துறை வளர்ச்சி குறித்த கருத்தரங்கம் மதுரை அழகர்கோயில் சாலையில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.

 நிகழ்வில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், தகவல் தொழில்நுட்பத்துறையின் மத்திய - மாநில அதிகாரிகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கூறுகையில் "எதிர்காலத்தில் வேலை வாய்ப்பை உருவாக்குவதிலும், மக்கள் வாழ்க்கையில் முன்னேற்றை. கொண்டு வருவதிலும் தகவல் தொழில்நுட்பத்துறை மிக முக்கிய பங்கு வகிக்க உள்ளது,

திமுக ஆட்சிக்கு வந்த இரண்டரை ஆண்டுகளில் அனைத்து துறைகள் சார்பில் பல புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது, புதிய தொழில் முனைவோருக்கு தமிழக அரசின் சார்பில் பல்வேறு உதவிகள் செய்து வருகிறோம், தமிழக அரசின் தொழில் கொள்கையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளன, பொதுவாக வளரும் நாடுகளில் பொருளாதார மந்த நிலை என்பது அரிதானது, 40 ஆண்டுகளில் வளரும் நாடுகளில் பொருளாதார மந்த நிலை ஏற்படவில்லை, கொரோனா காலகட்டத்தில் மட்டுமே வளரும் நாடுகளில் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டது.

 கொரோனா காலகட்டத்தில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் வேலை இழப்பு ஏற்பட்டாலும் சென்னை போன்ற இடங்களில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் வளர்ச்சியுடன் செயல்பட்டன, உலக அளவில் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டாலும் இந்தியாவிற்கு நேரடி பாதிப்புகள் வராது, பிற நாடுகளில் ஏற்படும் பொருளாதார மந்த நிலை இந்தியா சாதகமான சூழலாக அமையலாம், மதுரை உள்ளிட்டு தமிழகத்தில் ஏற்கனவே உள்ள தகவல் தொழில்நுட்ப பூங்காக்களில் புதிய நிறுவனங்கள் செயல்பட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது, சென்னை, ஒசூர், கோவை உள்ளிட்டு தமிழ்நாட்டில் 10 இடங்களில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

 தகவல் தொழில்நுட்பத்துறை வளர்ச்சிக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் புதிய அறிவிப்புகளை விரைவில் வெளியிட உள்ளார், கங்கை கொண்டான், நாகர்கோவில் உள்ளிட்ட இடங்களில் தகவல் தொழில்நுட்பத்துறை சார்பாக அறிவிக்கப்பட்ட திட்டங்கள் தொய்வின்றி செயல்படுத்தப்படும், துறை ரீதியாக அமைச்சர்கள் மாறினாலும் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும், மதுரையில் 600 கோடி ரூபாய் மதிப்பில் அறிவிக்கப்பட்ட எல்காட் தகவல் தொழில்நுட்ப பூங்கா திட்டம் தொடர்பாக நீதிமன்றத்தில் இருந்த வழக்கு முடிவுக்கு வந்துள்ளது, இதனையடுத்து அத்திட்டத்தை விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்" என கூறினார்