மனித வாழ்வுக்கு தேவையான பணியில் ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம்! - திருத்துறைப்பூண்டி கம்யூனிஸ்ட் சட்டமன்ற உறுப்பினர் புகழாரம்!
ஈஷாவின் காவேரி கூக்குரல் சார்பாக, உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு திருத்துறைப்பூண்டியில் இன்று (31-05-2024) மரம் நடும் விழா நடைப்பெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய கம்யூனிஸ்ட் சட்டமன்ற உறுப்பினர் திரு. கே. மாரிமுத்து அவர்கள் “காவேரி கூக்குரல் இயக்கத்திற்கு அரசாங்கம் ஆதரவாக இருக்கும் என்று நம்புகிறேன்” எனக் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் இந்தாண்டு (24-25 நிதியாண்டில்) 1.21 கோடி மரங்கள் நட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாவட்டம் தோறும் இதன் தொடக்க விழாக்கள் தொடர்ந்து நடைப்பெற்று வருகின்றன. அந்த வகையில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்களில் இந்த ஆண்டு 5,40,000 மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிடப்பட்டு உள்ளது.
இதன் தொடக்க விழா திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி பழைய பேருந்து நிறுத்த ஷெட்டில் நடைப்பெற்றது. நகர மன்றத் தலைவர் திருமதி. கவிதா பாண்டியன் அவர்களின் முன்னிலையில் நடைப்பெற்ற இவ்விழாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் திரு.கே. மாரிமுத்து அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அவர் மரக்கன்றுகளை நட்டும், விவசாயிகளுக்கு வழங்கியும் இந்நிகழ்வை தொடங்கி வைத்தார்.
இவ்விழாவில் சட்டமன்ற உறுப்பினர் திரு. மாரிமுத்து அவர்கள் பேசுகையில் “திருவாரூர் மாவட்டத்தில் காவேரி கூக்குரல் திட்டத்தின் மூலம் கிட்டத்தட்ட 5 லட்சத்திற்க்கும் மேற்பட்ட மரக் கன்றுகளை பல்வேறு இடங்களில் நட்டு இந்தப் பணியை மிகச் சிறப்பாக செய்து கொண்டு இருக்கிறார்கள். அதேபோல் பல்வேறு விவசாயிகளை சந்தித்தும் இந்த மரக்கன்றுகளை வழங்கி இருக்கிறார்கள். இவர்கள் ஏதோ ஒரு பேருக்காக மரக் கன்றுகள் வழங்கும் இயக்கமாக இல்லை, நான் நேரடியாக கவனித்த போது எந்த விவசாயிக்கு மரக்கன்றுகள் தேவையோ, அந்த விவசாயிகளிடம் நேரடியாக களத்திற்கு சென்று ஆய்வு செய்து, அவர்களின் மண் வளம் தண்ணீர்த் தேவை இதை முழுமையாக அறிந்து கன்றுகள் கொடுக்கப்படுகின்றன.
மனித வாழ்வுக்கு தேவையான இந்த மரக் கன்றுகள் நடும் பணியில் ஈஷா இயக்கம் தமிழ்நாடு முழுவதும் மிகப் பெரிய அளவில் இதில் பங்கு எடுத்து இருக்கிறார்கள். அதுவும் நம்முடைய திருவாரூர் மாவட்டத்திலும், திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இடங்களிலும் இந்த காவேரி கூக்குரல் இயக்கம் மிகச் சிறப்பாகவும், வெற்றிகரமாகவும் செய்து கொண்டு இருக்கிறார்கள். அரசாங்கம் அவர்களுக்கு முழுவதுமாக ஆதரவாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். இந்த நிகழ்ச்சியில் நாங்கள் பங்கெடுப்பதை பெருமையாக கருதுகிறோம்” எனக் கூறினார்
ஈஷா 2002-ம் ஆண்டு முதல் சுற்றுச்சூழல் மேம்பாடு மற்றும் மரம் நடும் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. காவேரி நதியை மீட்டெடுக்க காவேரி கூக்குரல் இயக்கம் 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
இவ்வியக்கம் தமிழகம் மற்றும் கர்நாடக மாநில காவேரி வடிநிலப் பகுதிகளில் பசுமை பரப்பை அதிகரிக்க விவசாய நிலங்களில் மரம் சார்ந்த விவசாயத்தை முன்னெடுக்கிறது. இதன் மூலம் மண்ணின் தரமும், அதன் நீர்பிடிப்பு திறனும் மேம்படுவதோடு, விவசாயிகளுக்கு பொருளாதார நலன்களும் கிடைக்கின்றது.
மேலும் இவ்வியக்கம் விவசாயிகள் மரம் நடுவதற்கும், தொடர்ந்த பராமரிப்பிற்கும் தேவையான தொழில்நுட்ப உதவிகளை இலவசமாக வழங்கி வருகிறது. மண்ணுக்கேற்ற மரங்கள் தேர்வு, நீர் மேலாண்மை, களை மேலாண்மை, ஊடுபயிர் சாகுபடி போன்ற ஆலோசனைகளை காவேரி கூக்குரல் பணியாளர்கள் விவசாய நிலங்களுக்கு சென்று வழங்கி வருகின்றனர். விவசாயிள் கூடுதல் தகவலுக்கும், மரக்கன்றுகள் தேவைக்கும் 80009 80009 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.