1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 14 பிப்ரவரி 2019 (17:41 IST)

சாதி, மதமற்ற மனிதன் – இந்தியாவில் சாத்தியமா ?

சாதி மதமற்றப் பெண் என சான்றிதழ் பெற்றுள்ள வேலூர் வழக்கறிஞர் சினேகாவின் செயல் குறித்து பல்வேறு விவாதங்கள் சமுதாயத்தில் உருவாகியுள்ளன.

வேலூர் மாவட்டம் திருப்பத்தூரைச் சேர்ந்தவர் சினேகா(21). வழக்கறிஞரான சினேகாவிற்கு சிறு வயதிலிருந்தே சாதி, மதத்தின் மீது நம்பிக்கை இல்லை. முற்போக்கான குடும்பத்தில் வளர்ந்த சினேகாவிற்கு இந்த சாதி மத வேறுபாடுகளில் இருந்து வெளிவர வேண்டும் என்பது சிறுவயது முதல் உள்ள கனவு. சினேகா தனது பெற்றோரின் உதவியுடன் ஜாதி, மதத்தின் பெயரை குறிப்பிடாமலேயே பள்ளி, கல்லூரி படிப்பை முடித்துள்ளார்.

இந்நிலையில் சினேகா தான் ஒரு ஜாதி, மதமற்றவர் என சான்றிதழ் வழங்கும்படி சிநேகா திருப்பத்தூர் தாசில்தார் அலுவலகத்தில் மனு அளித்துப் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு அதனைப் பெற்றுள்ளார். இந்தியாவிலேயே முதன் முதலில் ஜாதி மதமற்றவர் என்ற சான்றிதழ் பெற்றவர் சினேகாவே. இதையடுத்து நேற்று முதல் சமூக வலைதளங்களில் சினேகாவிற்குப் பாராட்டுகள் கிடைத்து வருகின்றன. மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் சினேகாவைப் பாராட்டியுள்ளார்.

ஒருப் பக்கம் பாராட்டுகள் கிடைத்தாலும் மறுபுறம் சினேகாவின் இந்த முடிவு சிறுபாண்மை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆபத்தாகவே முடியும் என்ற குரல்களும் எழுந்துள்ளன. மேலும் இந்தியாவில் பொருளாதாரத்தை முன்வைத்து தீண்டாமைக் கொடுமைகள் நடத்தப்படவில்லை, ஜாதியை வைத்தே அரங்கேற்றப்பட்டன. ஆகவே பொருளாதாரத்தில் முன்னேறினாலும் சாதி சான்றிதழ் பெற்றுக்கொள்வது அவசியம். வேண்டுமென்றால் இட ஒதுக்கீடு மூலம் கிடைக்கும் சலுகைகளில் சாதி மதம் ஆகியவற்றைக் குறிப்பிடாமல் இருந்தாலே சம்மந்தப்பட்டவர்கள் பொதுப்பிரிவில் சேர்க்கப்படுவார்கள். ஆனால் அதை விடுத்து சாதி, மதமற்றவர் என்ற சான்றிதழ் பெறுவதன் மூலம் பயன்கள் எதுவும் கிடைக்காது என சமூகவியலாளர்கள் பலர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் சாதிமதமற்ற மனிதன் எனும் கருத்தாக்கம் இந்தியாவில் சாத்தியம்தானா அல்லது இதுபோன்ற முயற்சிகள் சமூகவியலாளர்கள் சொல்வது போல சிறுபான்மையினர் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிராக அமையுமா என்பது குறித்து பிரபல எழுத்தாளரும் சினிமா விமர்சகருமான யமுனா ராஜேந்திரன் கருத்துத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது முகநூல் பதிவு பின்வருமாறு :-
 

சாதியற்ற சான்றிதழ் பெற்ற பெண்ணின் செயலை பல ‘சமூகவியலாளர்கள்’ சமூகப் பொருளாதார, வரலாற்று, ஷோ அன்ட் ஷோ காரணங்களை வைத்து அலசுகிறார்கள். உண்மையில் அது இலட்சிய நிலை. எல்லை கடத்தல் என்பது இதுதான். உன்மத்த நிலை. அவர் ‘யதார்த்தம்’ புரியாதவர் இல்லை. எனவேதான், இட ஒதுக்கீட்டை ஆதரிக்கிறார். அவரால் இட ஒதுக்கீடு இல்லாமல் வாழ முடியும் எனக் கருதுகிறார். இது ‘புதிய தமிழகம்’ தலைவர் கிருஷ்ணசாமி கோருவது போல சாதிய அடுக்கில் மேல் நோக்கிச் செல்லும் சமஸ்கிருதமயமாதல் அல்ல. இது முற்றிலும் சாதி கடந்த மனநிலை. இட ஒதுக்கீட்டிலிருந்து அது இல்லாமல் போகும் இந்த நிலை, சாதியின் பொருளாதார அடிப்படையை உணர்ந்து அதனைக் கடக்கும் நிலை. இது எல்லோருக்கும் சாத்தியமில்லை. அவருக்குச் சாத்தியமாகியிருக்கிறது. அவரும் அவரது தலைமுறையும் வாழ்க..