வடகிழக்கு பருவமழை காரணமாக தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழைக் காலம் தொடங்கியுள்ள நிலையில் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் ஆங்காங்கே மிதமானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது. நேற்று வரை சென்னை மற்றும் வட தமிழக மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வந்த நிலையில், இன்று டெல்டா மாவட்டங்களில் மழை பொழிவு உள்ளது.
அடுத்த 4 நாட்களுக்கு மழை தொடரும் என கூறப்பட்டிருந்த நிலையில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் உருவாகும் இந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி, தமிழகம் - இலங்கை கடற்கரை நோக்கி நகரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதனால் தமிழகத்தின் தென் கடலோர பகுதிகளான ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளிலும், கடலோர டெல்டா பகுதிகளான திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டிணம், மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளில் மழை பொழிவு அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Edit by Prasanth.K