1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 11 செப்டம்பர் 2018 (16:17 IST)

மரங்களை வெட்டினால் 8 வழிச்சாலை திட்டத்திற்கு தடை - நீதிமன்றம் அதிரடி

விவசாயிகளிடமிருந்து பட்டா நிலங்களை கைப்பற்றினாலோ மரங்களை வெட்டினாலோ 8 வழிச்சாலைக்கு தடை விதிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

 
சென்னை - சேலம் இடையே 277 கி.மீ. தூரத்திற்கு சுமார் பத்தாயிரம் கோடி ரூபாய் செலவில் தமிழக அரசு 8 வழிச் சாலை ஒன்றை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. இந்தச் சாலைக்கான நிலங்கள், 2013ஆம் ஆண்டின் நில கையகப்படுத்தப்படும் சட்டத்தின் 105வது பிரிவின்படி செய்யப்பட்டு வருகின்றன. 
 
2013ஆம் ஆண்டின் நிலம் கையகப்படுத்தும் சட்டம், ஒருவரது நிலத்தை பொது நோக்கத்திற்காக கையகப்படுத்தும்போது கருத்துக் கேட்பு நடத்த வேண்டும், சமூக பாதிப்பைக் கணக்கிட வேண்டும், போதுமான இழப்பீடு வழங்க வேண்டும், மறுவாழ்வுத் திட்டங்களை உறுதிப்படுத்த வேண்டுமெனக் கூறுகிறது. ஆனால், அந்தச் சட்டத்தின் 105வது பிரிவானது, 13 விஷயங்களைப் பட்டியலிட்டு, அவற்றுக்காக நிலங்களைக் கையகப்படுத்தினால் கருத்துக் கணிப்புக் கூட்டத்தையோ, சமூக பாதிப்பு கணக்கீட்டையோ செய்ய வேண்டியதில்லை என்று கூறுகிறது. 
 
இந்த நிலையில், சென்னை - சேலம் எட்டு வழிச் சாலைத் திட்டத்திற்காக வழக்குத் தொடர்ந்த பூவுலகின் நணபர்கள் அமைப்பு, 2013ஆம் ஆண்டின் நிலம் கையகப்படுத்தும் சட்டம் அரசியல் சாஸனத்திற்கே முரணானது என்பதால் அந்தப் பிரிவின் கீழ் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தக்கூடாது. அதற்குத் தடை விதிக்க வேண்டுமெனக் கோரியிருந்தது. 
 
இந்த வழக்கு கடந்த 4ம் தேதி விசாரணைக்கு வந்த போது, அரசுத் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர்கள், நிலத்தை வழங்கும் விவசாயிகளுக்கு போதுமான இழப்பீடு வழங்கப்படும் என்றும் மறுவாழ்வு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்தனர். எனவே, பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தொடர்ந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
 
இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது. சில பகுதிகளை அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலம் என வருவாய்துறை ஆவணங்களை மாற்றியதாகவும் புகார் எழுந்தது. எட்டு வழிச்சாலை திட்டத்தில் மரங்கள் வெட்டப்படுவது எந்த சூழ்நிலையில் உள்ளது? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.  மரங்களை வெட்டக்கூடாது என்ற உத்தரவை மீறினால் 8 வழிச்சாலை திட்டத்துக்கு தடை விதிக்க நேரிடும் என நீதிபதிகள் எச்சரித்தனர்.
 
மேலும், எந்த சூழ்நிலையில் மரங்கள் வெட்டப்படுகின்றன என்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.