1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: திங்கள், 8 பிப்ரவரி 2016 (12:51 IST)

ஈழத்திற்கு சென்றுவர வைரமுத்து பணம் பெற்றாரா? - அறிஞர்கள் அதிர்ச்சி

சமீபத்தில் முல்லைத்தீவில் நடைபெற்ற விழாவில் கலந்துகொள்ள இலங்கை சென்றிருந்த வைரமுத்து, அவ்விழாவில் பங்குகொள்ள பணம் பெற்றார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
 

 
முல்லைத்தீவில் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஷ்வரன் தலைமையில் உழவர் பெருவிழா கொண்டாடப்பட்டது. அதில் சிறப்பு விருந்தினராகக் கவிஞர் வைரமுத்து கலந்துகொண்டார்.
 
அப்போது பேசிய அவர், ”யாழ்ப்பாணம் வந்து இறங்கியதும் இந்த மண்ணை என் உள்ளங்கையிலெடுத்து என் நெற்றியில் வைத்து வணங்கினேன். முல்லைத்தீவிலும் முள்ளிவாய்க்காலிலும் கனத்த மனத்தோடு என் கண்ணீரைச் சிந்தினேன்.
 
யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி, ஆனையிறவு, அம்பாறை, முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால், வல்வெட்டித்துறை, புங்குடுதீவு என்பவை எல்லாம் வெறும் ஊர்ப்பெயர்கள் அல்ல. இந்த நூற்றாண்டின் வரலாற்றுக் குறிப்புக்கள்.
 
ஈழமகாகாவியம் ஒன்றை எழுதி முடிப்பதைத் தான் என்வாழ்நாளின் பெரும்பணியாகக் கருதிக்கொண்டிருக்கிறேன். கடும் உழைப்பில் அதை நான் நிறைவு செய்வேன். இனி இந்த மண்ணில் இரத்தம் சிந்த வேண்டாம், எங்கள் தமிழ் மக்கள் புதிய திசையில் புதிய வாழ்வு பெறவேண்டும் என்று வாழ்த்துகிறேன்” என்று கூறி இருந்தார்.
 
இந்நிலையில் இவ்விழாவில் கலந்துக்கொள்வதற்காக கவிஞர் வைரமுத்து மிக பெரிய பணத்தொகையினை பெற்றுக்கொண்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
 
வைரமுத்து காசு பெற்றதற்கான உண்மைத்தன்மை இதுவரையில் உத்தியோகபூர்வமாக வெளிவராவிட்டாலும், அப்படி இடம்பெற்றிருந்தால், ஈழத்தை வைத்து அரசியல் நடாத்தும் சில இந்திய அரசியல்வாதிகளுக்கும், ஈழத்தின் வலியை சொல்ல காசு பெற்றுக்கொண்ட வைரமுத்துவிற்கு என்ன வித்தியாசம் என சில இலக்கிய ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
 
இதற்கு மேலாக இலங்கையின் நிலைமைகளை முள்ளிவாய்க்கால் என்ற தலைப்பில் கவிதையாக எழுதி அதனையே கவிதை வீடியோ ஆல்பமாக வெளியிட்டுள்ளார். வைரமுத்து கவிதை வாசிக்கும் பின்னணில் அவர் இலங்கை சென்று வந்த காட்சிகள் புகைப்படங்களாக இடம்பெறுகிறது.