சென்னையில் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் விற்பனை: பெண் தலைமையிலான கும்பல் கைது!
25 வயதான பெண்ணின் தலைமையில் ஒரு கும்பல் மெத்தபெட்டமைன் என்ற போதைப்பொருளை விற்பனை செய்து கொண்டிருந்த நிலையில், அந்த கும்பல் ஒட்டுமொத்தமாக கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில ஆண்டுகளாக போதைப்பொருள் விற்பனை அதிகரித்து வருகிறது. குறிப்பாக மெத்தபெட்டமைன் என்ற போதைப்பொருள் விற்பனை சர்வ சாதாரணமாக விற்பனையாகி வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
ஆனால், தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றும், போதைப்பொருள் விற்பனை செய்பவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் தமிழக அரசு விளக்கம் அளித்திருந்தது.
இந்த நிலையில், சென்னையில் நடத்தப்பட்ட போதைப்பொருள் நடவடிக்கையில், தொடர்ச்சியாக பிடிபட்டதன் விசாரணையில் அதனை சப்ளை செய்த மணலி பகுதியைச் சேர்ந்த 25 வயது பெண் தலைமையிலான கும்பல் கைது செய்யப்பட்டுள்ளனர். பிடிபட்ட 25 வயது பெண் மவுபியா என்பவரின் தந்தை ஏற்கனவே போதைப்பொருள் வழக்கில் சிக்கி புழல் சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தந்தைக்கு பிறகு, கூட்டாளிகளுடன் அவரது மகள் இணைந்து போதைப்பொருள் சப்ளை செய்து வந்த நிலையில், தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Edited by Mahendran