ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 1 ஆகஸ்ட் 2024 (17:21 IST)

பாய்ந்து வரும் காவிரி நீர்.! ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு.! வெள்ள அபாய எச்சரிக்கை..!!

Hogenakkal
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. வினாடிக்கு இரண்டு லட்சம் கன அடி நீர் வந்து கொண்டிருப்பதால், கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
 
கர்நாடகா, கேரளா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளதால் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளான குடகு, ஹாசன்,மாண்டியா, உத்தர கன்னட, தட்சண கன்னடா, உடுப்பி, வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் மிக கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் அதனுடைய முழு கொள்ளளவையும் எட்டி உள்ளது. 

கர்நாடகா அணைகளில் இருந்தும் நேற்று மாலை 2 லட்சத்து 20 ஆயிரம் கன அடி உபரிநீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டது. அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று  மாலை நிலவரப்படி வினாடிக்கு ஒரு லட்சத்து 40 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து  தற்போது வினாடிக்கு இரண்டு லட்சம் கன அடியாக உயர்ந்துள்ளது.
 
இந்த நீர் வரத்து காரணமாக மெயின் அருவி, சினி பால்ஸ், ஐந்தருவியில் ஆகிய அருவிகளை தண்ணீர் மூழ்கடித்தவாறு செல்கிறது. மேலும் அருவிக்கு செல்லும் நடைபாதைகளை மூழ்கடித்தவாறு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கர்நாடக அணைகளில் இருந்து தொடர்ந்து உபரி நீரானது திறந்து விடப்பட்டு வருவதால் ஒகேனக்கல்லில் மேலும் நீரின் அளவு அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப் படுகிறது.

 
நீர்வரத்து அதிகரிப்பால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவி மற்றும் ஆற்றுப்பகுதியில் குளிக்கவும் பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகத்தால் விதிக்கப்பட்ட தடையானது தொடர்ந்து 16-வது நாளாக நீடித்து வருகிறது. மேலும் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால்  கரையோரங்களில் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.