வியாழன், 31 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: வெள்ளி, 18 ஜூலை 2014 (18:53 IST)

பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு: 3 நாளில் 10 அடி உயர்வு

பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தால் அணையின் நீர்மட்டம் கடந்த 3 நாட்களில் 10 அடி உயர்ந்தது.
 
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணை தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணை என்ற பெருமை கொண்டது. இந்த அணையின் மொத்த உயரம் 120 அடியாகும். இதில் சகதிகள் 15 அடி கழித்து மொத்த நீர்மட்ட உயரம் 105 அடியாகும். மொத்த நீர் கொள்ளவு 32 டி.எம்.சி. ஆகும்.
 
இந்த அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் மூலம் திறந்துவிடும் தண்ணீரால் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறுகிறது. பவானி ஆற்றில் திறந்துவிடப்படும் தண்ணீரால் தடப்பள்ளி, அரக்கன்கோட்டை மற்றும் காளிங்கராயன் பாசனப்பகுதியை சேர்ந்த 50 ஆயிரம் ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறுகிறது.
 
கடந்த மாதம் இரண்டு ஆண்டுகளாக அணையின் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் பருவமழை பொய்த்தது. இதனால் அணைக்கு வரும் தண்ணீர் அளவு குறைந்ததால் அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து. இதனதால் குடிநீர் பிரச்சனை ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டது. அணையின் நீர்மட்டம் குறைந்ததால் மீன் பிடிப்பு தொழில் மற்றும் நீர்மின் உற்பத்தி உள்ளிட்டவைகள் பாதிக்கப்பட்டது.
 
இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் அணையின் நீர்வள ஆதாரமான பவானி ஆறு மற்றும் மோயாற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. கடந்த 14 ஆம் தேதி காலை அணையின் நீர்மட்டம் 44.4 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் வந்தது.
 
மதியம் தண்ணீர் வரத்து வினாடிக்கு 6 ஆயிரமாக அதிகரித்தது. இதனையடுத்து தொடர்ந்து அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து வருவதால் நேற்று மாலை அணையின் நீர்மட்டம் 55 அடியாக உயர்ந்தது. தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரித்து வருவதால் அணையின் நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.