1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : வெள்ளி, 15 செப்டம்பர் 2017 (12:06 IST)

ஒரு புறம் ஸ்டாலின் ; மறுபுறம் தினகரன் : சமாளிப்பாரா எடப்பாடி?

தமிழக அரசுக்கு எதிராக எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினும், டிடிவி தினகரன் தரப்பும் அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.


 
 
அதிமுகவின் இரு அணிகளும் இணைந்த பின், பொதுக்குழுவை கூட்டுவது, சசிகலாவை நீக்குவது என பல அதிரடி நடவடிக்கைகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எடுத்து வருகிறார். சசிகலாவை நீக்கியதன் மூலம், கட்சி மற்றும் ஆட்சியின் கட்டுப்பாடு எடப்பாடி மற்றும் ஓ.பி.எஸ் வசம் வந்துள்ளது.  சசிகலா மற்றும் தினகரன் ஆகியோரை ஒதுக்கி வைக்கும் முயற்சியில் ஏறக்குறைய எடப்பாடியும், ஓ.பி.எஸ்-ஸும் வெற்றி பெற்றுவிட்டார்கள் என்றே தெரிகிறது. அதோடு, இரட்டை இலை சின்னத்தையும் பெற்றுவிட்டால், தினகரன் பக்கம் இருக்கும் எம்.எல்.ஏக்கள், தங்கள் அணிக்கு வந்துவிடுவார்கள் என எடப்பாடி தரப்பு நம்புகிறது. 
 
ஆனால், எடப்பாடி அரசு எப்படியாவது கவிழ்க்க வேண்டும் என்பதில் தினகரன் மற்றும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் தீவிரமாக உள்ளனர். இரு தரப்பிலும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதேபோல், அவர்கள் இரு தரப்பிலும் ஜனாதிபதியை சந்தித்து ஆளுநர் நடவடிக்கை எடுக்காதது குறித்து புகார் தெரிவிக்க இருக்கிறார்கள். இப்படி திமுகவும், தினகரனும் தீவிரமாக செயல்படுவதால், எடப்பாடி பழனிச்சாமி மிரண்டு போயிருக்கிறார் எனக் கூறப்படுகிறது. 
 
நீதிமன்றத்தில் திமுக சார்பில் வாதாட உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்களில் புகழ் பெற்றவரான கபில் சிபலை ஸ்டாலின் இறக்கியுள்ளார். அவரது வாதம் மூலமாகத்தான், வருகிற 20ம் தேதி வரை சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கூடாது என உத்தரவு பெறப்பட்டுள்ளது. இவை அனைத்தையும் எடப்பாடி தரப்பு அதிர்ச்சியுடன் கவனித்து வருகிறது.
 
நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தால் அதில் எடப்பாடி பழனிச்சாமி தனது மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாது என ஸ்டாலின் மற்றும் தினகரன் இருவருமே திடமாக நம்புகிறார்கள். ஆனால், மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. எங்களுக்குள் எந்த பிரச்சனையுமில்லை. நாங்கள் நாளை ஒன்று சேர்ந்து கொள்வோம். இது தற்காலிகம்தான் என பொள்ளாச்சி ஜெயராமன் உட்பட பலரும் பேட்டி கொடுத்து வருகிறார்கள்.
 
மு.க.ஸ்டாலின் மற்றும் தினகரன் ஆகியோரின் சட்ட நடவடிக்கைகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எப்படி எதிர் கொள்கிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.