வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: வெள்ளி, 15 செப்டம்பர் 2017 (15:48 IST)

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம்? - முதல்வர் தீவிர ஆலோசனை

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்வது குறித்து சபாநாயகர் தனபாலுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பி.எஸ் ஆகியோர் ஆலோசனை செய்து வருகின்றனர்.


 

 
தினகரனை ஆதரித்த 19 எம்.எல்.ஏக்கள், பழனிச்சாமிக்கு எதிராக ஆளுநரிடம் மனு கொடுத்தனர். மேலும், புதுச்சேரியில் உள்ள சொகுசு விடுதியில் தங்கியிருந்தனர். அதில், ஜக்கையன் எம்.எல்.ஏ மட்டும் மட்டும் மீண்டும் எடப்பாடி அணியில் இணைந்து விட்டார். மீதம் உள்ள 18 எம்.எல்.ஏக்கள் தற்போது கர்நாடக மாநிலம் குடகு பகுதியில் உள்ள கூர்க் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
 
ஆளுநரிடம் கடிதம் கொடுத்தது தொடர்பாக, நேரில் வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என சபாநாயகர் தனபால் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பினார். அதற்கு, எம்.எல்.ஏக்கள் அளித்த விளக்கத்தில் திருப்தி இல்லை எனக்கூறி, மீண்டும் ஒரு நோட்டீஸ் அனுப்பினார். நேற்று அதற்கான கெடு முடிவடைந்தும் எம்.எல்.ஏக்கள் விளக்கம் அளிக்கவில்லை. அந்நிலையில், வெற்றிவேல் எம்.எல்.ஏ வழக்கறிஞர் மூலமாக 18 பேரின் சார்பாக பதில் அளித்தார்.


 

 
மேலும், தாங்கள் கேட்டிருக்கும் ஆவணங்களை அளித்தால், 18 எம்.எல்.ஏக்களும் சபாநாயகர் முன்பு ஆஜரவார்கள் என வெற்றிவேல் தரப்பு வழக்கறிஞர் கூறியிருந்தார். அந்நிலையில்தான், வருகிற 20ம் தேதி வரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கூடாது என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
 
அதேநேரம், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை துவங்கிவிட்டதாக அரசு வழக்கறிஞர் நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தில் கூறினார். 
 
இந்நிலையில், நேற்றும், இன்று மாலையும், சபாநாயகர் தனபால், எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பி.எஸ் ஆகியோர் ஆலோசனை நடத்தினர். அதில் எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி முதல்வரும், ஓ.பி.எஸ்-ஸும் தனபாலிடம் வலியுறுத்தியதாக தெரிகிறது. 
 
ஏனெனில், அவர்களை தகுதி நீக்கம் செய்துவிட்டால், நம்பிக்கை வாக்கெடுப்பில் அவர்கள் பங்கு பெற முடியாது.  எனவே, இதுபற்றி அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணுடனும் சபாநாயகர் தனபால் ஆலோசித்து வருகிறார்.