நாங்க முதல்வர் பேச்சை கேட்க வரலை.. ஆளுநர் உரை கேக்கதான் வந்தோம்! – எடப்பாடி பழனிசாமி!
இன்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆளுநருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியதும், ஆளுநர் வெளியேறியதும் குறித்து திமுகவிற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இன்று தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்ற நிலையில் ஆரம்பமாக ஆளுநர் உரையை வாசித்தார். ஆனால் அதில் அவர் தமிழ்நாடு அரசு குறிப்பிட்டிருந்த திராவிட மாடல் என்ற வார்த்தையையும், மற்ற சில சொற்றொடர்களையும் தவிர்த்ததாக கூறப்படுகிறது. இதனால் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநருக்கு எதிரான தீர்மானத்தை அவரது முன்னாலேயே பரிந்துரை செய்தார்.
இதனால் ஆளுநர் ஆர்.என்.ரவி இடையிலேயே வேகமாக எழுந்து வெளியேறினார். இதனால் சட்டமன்றத்தில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. இந்நிலையில் சட்டமன்ற நிகழ்வுகள் குறித்து பேசியுள்ள எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி “கவர்னர் உரை என்பது ஆண்டு தொடக்கத்தில் அரசு செயல்படுத்த உள்ள திட்டங்கள் பற்றியதாகும். ஆனால் இந்த ஆளுனர் உரையில் சென்ற ஆண்டை போலவே அரசும், முதலமைச்சரும் தங்களை தாங்களே ஆளுனர் வழியாக புகழ்பாடிக் கொள்ளும் விதமாகவே இருந்தது.
கவர்னரை அமர வைத்துக் கொண்டு முதல் அமைச்சர் அவ்வாறு பேசியது அநாகரீகமானது. தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு அடியோடு சீரழிந்துவிட்டது” என்று பேசியுள்ளார். ஆளுநர் மீதான தீர்மானம் குறித்து பாஜக உள்ளிட்ட கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.
Edit By Prasanth.K