Last Updated : செவ்வாய், 21 மார்ச் 2017 (15:59 IST)
பணப் பதுக்கல் விவகாரம்: சேகர் ரெட்டி மீண்டும் கைது!
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட சேகர் ரெட்டி அமலாக்கத் துறையால் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்ட விரோதமாக 24 கோடி ரூபாய் அளவுக்கு 2 ஆயிரம் ரூபாய் புதிய நோட்டுகளை பதுக்கியதாக சேகர் ரெட்டி, பிரேம்குமார், சீனிவாசலு, ரத்தினம், ராமச்சந்திரன் ஆகியோர் கடந்த 2016 டிசம்பர் மாதம் மத்திய புலனாய்வுத் துறையால் கைது செய்யப்பட்டனர்.
இதேபோல் சென்னை தி.நகர் வெங்கட்நாராயணா சாலையில் உள்ள வீட்டிலிருந்து 8 கோடி ரூபாய் அளவுக்கு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுதொடர்பாக சேகர் ரெட்டி, பிரேம்குமார், சீனிவாசலு ஆகியோர் மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இவர்களின் ரத்தினம், ராமச்சந்திரன் ஆகியோருக்கு ஏற்கனவே நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுவிட்டது. இதனைத் தொடர்ந்து மற்ற மூவருக்கும் சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி மார்ச் 17 அன்று ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
இவர்கள் மூவரும் மறு உத்தரவு வரும்வரை தினமும் காலை 10 மணிக்கு சிபிஐ காவல்நிலையத்தில் ஆஜராகி கையெழுத்து இடவேண்டும். பாஸ்போர்ட்டுகளை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும். மூவரும் தலா 5 லட்சம் ரூபாய் நீதிமன்றத்தில் வைப்புத்தொகையாக செலுத்த வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து திங்களன்று (மார்ச். 20) பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணைக்கு சேகர் ரெட்டி ஆஜரானார். 10 மணி நேர விசாரணைக்கு பிறகு சேகர் ரெட்டியை மீண்டும் அமலாக்கத்துறை கைது செய்தது.