செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: செவ்வாய், 28 பிப்ரவரி 2017 (18:03 IST)

போங்கடா போக்கத்த பசங்களா: ஓபிஎஸ்-ஐ திட்டி தீர்த்த அதிமுக நாளேடு!

போங்கடா போக்கத்த பசங்களா: ஓபிஎஸ்-ஐ திட்டி தீர்த்த அதிமுக நாளேடு!

அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான டாக்டர் நமது எம்ஜிஆர் வெளியிட்டுள்ள அடிப்பதுபோல் அடிப்பாராம்! வலிப்பதுபோல் நடிப்பாராம் என்ற கட்டுரையில் ஓபிஎஸ் மற்றும் திமுகவினரை கடுமையாக விமர்சித்துள்ளது.


 
 
சட்டசபையில் திமுகவும், பன்னீர்செல்வமும் கூட்டு வைத்து செயல்பட்டதாகவும், ஜெயலலிதாவை சமீபத்தில் கொலைக் குற்றவாளி என மு.க.ஸ்டாலின் விமர்சித்ததை ஓபிஎஸ் நேரம் கழித்து பெயருக்கு கண்டன அறிக்கை வெளியிட்டதாகவும் நமது எம்ஜிஆர் நாளேடு விமர்சித்துள்ளது.
 
அதில் கூறியிருப்பதாவது:-
 
கருணைத் தாயாம் நம் அம்மாவை கொலைக் குற்றவாளி என்பதாக மு.க.ஸ்டாலின் பத்திரிகையாளர்களிடம் தரம் தாழ்ந்து விமர்சிக்க, அடுத்த வினாடியே அவர் வெட்கித் தலைகுனியும்வண்ணம் வெப்பம் தகிக்கும் பதிலடி அறிக்கை தந்ததுதோடு,அவர் தன் பண்பற்ற செயலுக்காக பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கடும் கண்டனம் தெரிவித்ததும் நம் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் என்றால்.
 
“மாப்பிள்ளை பன்னீர்” என்று நம் அம்மாவின் துகில் இழுத்த துரியோதனனால் வர்ணிக்கப்பட்ட பச்சை துரோகியோ, 48 மணி நேரம் கழித்து மு.க.ஸ்டாலினுக்கு கண்டனம் என்பதாக மெல்லிய மயிலிறகால் வருடிவிடும் வார்த்தைகளால் ஒப்புக்கு ஓர் அறிக்கை விட்டார். உடனே, மு.க.ஸ்டாலினும், பன்னீருக்கு கண்டன அறிக்கை என்ற பேரிலே புனுகு பூசும் விதத்தில் ஒரு ஒத்தட அறிக்கையை வெளியிட்டு, தி.மு.க. மற்றும் ஒ.ப.தி.மு.க. இடையே உள்ள அந்தரங்க உறவுக்கு பங்கம் வராமல் இரு தரப்பும் நாடகமாடியிருக்கிறது.
 
சட்டமன்றத்தில் தி.மு.க. நடத்திய ரவுடித்தனத்தை கண்டிக்காதவர். அம்மாவால் நியமிக்கப்பட்ட சட்டமன்ற சபாநாயகரின் சட்டையை பிடித்து இழுத்து அவமானப்படுத்தியதை கண்டுகொள்ளாதவர். அம்மாவை கொலைக்குற்றவாளி என்று விமர்சித்த மு.க.ஸ்டாலினுக்கு வேண்டா வெறுப்போடு ஒப்புக்கு ஓர் அறிக்கை விட்டு ஊரை ஏய்க்கப் பார்ப்பவர்.
 
தி.மு.க.வினருக்கு கழகத்தின் கரை வேட்டிகளை கட்டிவிட்டு, அம்மாவால் களமிறக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக பொதுமக்கள் போர்வையில் போராட்டம் என்பதாக தி.மு.க.வோடு கூடி அரசியல் மோசடியில் ஈடுபட்டு வரும் பச்சைத்துரோகி பன்னீரு.
 
பிரம்புக்கும் வலிக்காம, விஷப் பாம்புக்கும் வலிக்காம அடிப்பது போல் அடிப்பாராம், உடனே ஆரூரார் மைந்தன் வலிப்பதுபோல் துடிப்பாராம்! அதுசரி, மக்களும் இதையெல்லாம் நம்புபவர்களாக நடிப்பதுபோல் நடிப்பார்கள்தானே! போங்கடா போங்கடா போக்கத்த பசங்களா! உங்களின் திருட்டுக் கூட்டு தெருவுக்கு வந்து வெகுநாளாச்சேப்பு!.