ரஜினி மன்ற நிர்வாகிக்கு திமுகவில் முக்கிய பதவி
ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்த ஜோசப் ஸ்டாலின் சமீபத்தில் திமுகவில் இணைந்த நிலையில் இன்று அவருக்கு அக்கட்சியில் முக்கிய பதவி வழங்கப்பட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கி எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் உடல்நல குறைவால் கட்சி தொடங்கும் முடிவிலிருந்து விலகினார் ரஜினிகாந்த். அவரது இந்த முடிவு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் பலர் வேறு சில கட்சிகளில் இணைய தொடங்கியுள்ளனர்.
சமீபத்தில் தூத்துக்குடி ஸ்டாலின் உள்ளிட்ட சில ரஜினி மக்கள் மன்ற மாவட்ட நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்.
இதுகுறித்து விளக்கமளித்துள்ள மக்கள் மன்ற தலைமை நிர்வாகி சுதாகர் “ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் விரும்பினால் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அவர்களுக்கு விருப்பமான எந்த கட்சியிலும் இணையலாம். அதற்கு அவர்களுக்கு உரிமை உள்ளது. எந்த கட்சியில் இணைந்தாலும் அவர்கள் ரஜினி ரசிகர்கள் என்பது எப்போதும் மாறாதது” என தெரிவித்திருந்தார்.
இதனால் ரஜினி மக்கள் மன்றத்தில் இணைந்திருந்தவர்களும் ரஜினி ரசிகர்களும் ரஜினி அரசியல் கட்சி தொடங்காததால் ஏமாற்றத்தில் இருந்தாலும்கூட சுதாகர் கூறிய கருத்தை பலரும் ஆமோதித்தனர்.
இந்நிலையில் சமீபத்தில் திமுகவில் இணைந்த ஜோசப் ஸ்டாலினுக்கு திமுக சிறுபான்மையினர் நலஉரிமைப் பிரிவு இணைச்செயலாளராகப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.