1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 14 ஜூலை 2024 (15:54 IST)

ஆம்ஸ்ட்ராங்க் கொலையில் திமுக நிர்வாகிகள் தொடர்பு! முதல்வர் எப்போது வாய் திறப்பார்? - அண்ணாமலை கேள்வி!

Annamalai Stalin

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில் அதை முன்வைத்து முதல்வர் எப்போது வாய் திறப்பார் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சி தமிழக மாநில தலைவரான ஆம்ஸ்ட்ராங்க் கடந்த 5ம் தேதி மர்ம கும்பலால் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை தொடர்ந்து தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை நடத்திய போலீஸார் திருவெங்கடம் உள்ளிட்ட பல முக்கிய குற்றவாளிகளை கைது செய்தனர்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணையின்போது தப்பி ஓட முயன்ற திருவெங்கடம் இன்று காலை போலீஸாரால் என்கவுண்ட்டர் செய்யப்பட்ட சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து தற்போது ஆம்ஸ்ட்ராங்க் கொல்லப்பட்ட சிசிடிவி காட்சிகளை காவல்துறை வெளியிட்டுள்ளது. அதில் கைது செய்யப்பட்டவர்களும், கொலையாளிகளும் ஒரே ஆட்கள்தான் என தெரிய வந்துள்ளது.
 

மேலும் இந்த கொலையில் திமுக வழக்கறிஞரான அருள் உள்ளிட்ட சில திமுக பிரமுகர்களும் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது. முன்னதாக காலையில் திருவெங்கடம் என்கவுண்ட்டர் செய்யப்பட்டபோது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, இதில் சம்பந்தப்பட்டுள்ள திமுக நிர்வாகிகளை காப்பாற்றுவதற்காக என்கவுண்ட்டர் செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியிருந்தார்.

தற்போது சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில், அதில் உள்ள அருள், கலை மா ஸ்ரீனிவாசன், சதீஷ் ஆகியோர் திமுக அமைச்சர் நாசருடன் எடுத்துக் கொண்டுள்ள புகைப்படங்களை பதிவிட்டுள்ள அண்ணாமலை இதன் மூலம் இந்த கொலையில் திமுக நிர்வாகிகள் பங்கு இருப்பது உறுதிப்பட்டிருப்பதாக எடுத்துக்காட்டியுள்ளதுடன், எப்போது வாய் திறப்பார் முதல்வர் மு.க.ஸ்டாலின்? என கேள்வியும் எழுப்பியுள்ளார்.

Edit by Prasanth.K