1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 29 டிசம்பர் 2017 (11:26 IST)

2ஜி தீர்ப்பு எதிரொலி : திமுக-காங்கிரஸ் கூட்டணியில் விரிசல்?

2ஜி அலைக்கற்றை வழக்கில் கிடைத்த தீர்ப்பை அடுத்து, திமுக-காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் விழும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

 
நாடெங்கும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 2ஜி வழக்கில் ஆர்.ராசா, கனிமொழி உட்பட அனைவரையும் விடுவித்து டெல்லி சிறப்பு சிபிஐ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்தது. அதைத் தொடர்து சென்னை வந்த ராசா, கனிமொழி ஆகியோருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்நிலையில், 3 நாள் பயணமாக கடந்த 27ம் தேதி நீலகிரி சென்ற ஆ.ராசா அங்கு மக்கள் மத்தியில் உரையாடினார். 
 
அப்போது “மன்மோகன் சிங் சிறந்த பிரதமர். ஆனால், அவருக்கும் 2ஜி குறித்து சரியான புரிதல் இல்லை. என்னைக் கைது செய்தால் பிரச்சனை தீர்ந்து விடும் என அவர் நினைத்தார். எனவே, அதன் பலனை அவர் அனுபவித்தார்” எனப் பேசினார்.
 
இந்த விவகாரம் காங்கிரஸ் தரப்பினருக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஸ்டாலினுக்கு தெரியாமல் ராசா இப்படி பேசியிருக்க வாய்ப்பில்லை என அவர்கள் கருதுகிறார்கள். அதோடு, ராசாவின் இந்த கருத்து பற்றி ஸ்டாலின் எந்த கருத்தும் இதுவரை தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

 
மேலும், ஆ.ராசா தனது 2ஜி வழக்கு அனுபவம் பற்றி ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார். அதில், கண்டிப்பாக மன்மோகன் சிங் பற்றி பல குற்றச்சாட்டுகளை அதில் குறிப்பிட்டிருப்பார். எனவே, அந்த புத்கம் வெளியாவதற்கு முன் திமுக கூட்டணியிலிருந்து வெளியேறி விட வேண்டும் என காங்கிரஸ் மேலிடம் கருதுவதாக தெரிகிறது.
 
அப்படி காங்கிரஸ் விலகினால், அந்த இடத்தை பெற பாஜக முயற்சி செய்யும் எனத் தெரிகிறது. ஏற்கனவே, சென்னை வந்த மோடி திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து விட்டு சென்றார். மேலும், 2ஜி வழக்கின் தீர்ப்பின் முன்பே டெல்லியிலிருந்து சில பாஜக தலைவர்கள் ஸ்டாலினுக்கு வாழ்த்து கூறியதாக செய்தி வெளியானது. அதேபோல், ஆர்.கே.நகரில் அதிமுக தோல்வியை சந்தித்ததால், இனிமேல், அவர்களை நம்பி பலனில்லை என பாஜக கருதியதாகவும் செய்தி வெளியானது.
 
இந்த நிலையில், திமுக-காங்கிரஸ் கூட்டணி பிரிந்தால் தமிழக அரசியலில் பல மாற்றம் ஏற்படும் என அரசியல் விமர்சர்கள் கருதுகிறார்கள்.