ஞாயிறு, 29 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : வியாழன், 18 ஆகஸ்ட் 2016 (11:09 IST)

இயற்கையின் விதிப்படி இரைக்கு இரையானான் நா.முத்துக்குமார் : இயக்குனர் ராம்

முத்துக்குமார் உறங்குகிறான் : இயக்குனர் ராம்

கவிஞரும், சினிமா பாடலாசிரியருமான நா.முத்துகுமார் உடல்நலக்குறைவு காரணமாக சமீபத்தில் மரணம் அடைந்தார். அது குறித்து அவரின் நெருங்கிய நண்பரான இயக்குனர் ராம் ஒரு நாளிதழுக்காக ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.


 

 
ராம் இயக்கிய தங்க மீன்கள் படத்தில் இடம் பெறும்  ‘ஆனந்த யாழை’ பாடல்தான் முத்துக்குமாருக்கு முதல் தேசிய விருதை பெற்றுத் தந்தது குறிப்பிடத்தக்கது.
 
அந்த கட்டுரையில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:
 
ரொம்ப வளத்தியான முத்துக்குமார் உறங்கிக் கொண்டிருக்கிறான். யார் வந்தார்கள், யார் போனார்கள் என்று எதையும் சட்டைசெய்யாமல். அகிரா குரோசோவாவின் ‘ராஷோமோன்'படத்தைப் பல முறை பார்த்த அவனுக்கு தன்னைப் பார்த்துச் செல்லும் ஒவ்வொருவரும் தன்னுடைய இனி கலையவே முடியாத உறக்கம் குறித்து ஒவ்வொரு கதை சொல்வார்கள் என்பது தெரிந்துதான் இருக்கும். தெரிந்தவர், தெரியாதவர் எனப் பலர் அவனுக்காக இரங்குவர் என்பதும் அவனை முன்வைத்து மற்ற காரியங்களைச் சொல்வர் என்பதும் அவனுக்கு உறுதியாகத் தெரிந்திருக்கும். ஏனெனில், அவன் இருக்கும்போதே அவனைக் குறித்த கதைகளைக் கேட்டுச் சிரித்திருக்கிறான். அவன் இறந்ததாய் தவறுதலாய் செய்திகள் முன்பு வந்தபோது, இறப்புக்குப் பிறகு என்ன பேசுவர் என்பதைக் கேட்டும் பார்த்தும் இருக்கிறான். 
 
முத்துக்குமார் அவனுடைய சமகால அகக் கதையை, மன உளைச்சலை, சிக்கலை, வலியை, வருத்தத்தை நேரடியாக எழுத்தில் முன்வைத்தது இல்லை. தூரத்திலிருந்து பார்ப்பவருக்கு அவன் எளிதில் அடைய முடியாத ஒரு மலை உச்சியில் நின்றுகொண்டிருந்ததாகவே தோன்றியிருக்கும். இரண்டு தேசிய விருதுகள், 1500-க்கும் மேற்பட்ட பாடல்கள், 12 வருடங்களாக தமிழ்த் திரைப்படப் பாடல் உலகின் சூப்பர் ஸ்டார், பத்திரிகைகளில் தொடர்கள், எழுத்தாளர்கள் - பத்திரிகை ஜாம்பவான்கள் - அரசியல்வாதிகள் - அரசாங்க உயர் அதிகாரிகள் எல்லோரிடமும் முரண் இல்லா உறவு என அனைத்தும் ஆனது அந்த மலை உச்சி. ஏனையோர் அதிசயிக்கிற மலை உச்சி. ஆனால், அம்மலை உச்சியில் அந்த ஒற்றை மனிதன் சுழற்றி அடிக்கும் காற்றில் தலை மறைக்கும் புற்களுக்கு நடுவே நின்றுகொண்டிருந்தான். அங்கு இரவில் குளிரும் அதிகம், பகலில் வெப்பமும் அதிகம். மழை பெய்யாது கொட்டும், அப்புறம் அந்த உச்சி ஆபத்தானது. எந்த நொடியும் வழுக்கி விழ நேரலாம் என்பதும் அவனுக்கும் திரைத் துறைக்கும் தெரிந்த உண்மை.


 

 
உச்சியிலிருந்து வழுக்கி விழாமல் 12 வருடம் தன்னைத் தானே தாங்கிப் பிடித்துக்கொண்டிருந்தான் முத்துக்குமார். அவன் பாட்டெழுதாத நாள் இல்லை. வீடு, பாட்டு இவை இரண்டும் இன்றி, அவன் வாழ்வில் இந்த 12 வருடங்களில் அவன் அவனுக்காகச் செலவழித்த நேரம் வெகு சொற்பம். பயணங்களில் தீரா விருப்பம் கொண்ட அவன், பயணம் செய்தது வெகு சொற்பம். ஆள் கூட்டத்தில் ஒரு தனி ஆள்.
 
சினிமா என்கிற மாயக் காட்டில் அயராது வேட்டைக்குச் சென்ற வேட்டைக்காரன். அந்த மாயக் காடு விருந்துகளும் சிற்றின்பங்களும் கேளிக்கைகளும் நிறைந்த இருட்டு உலகம் என்றே பொதுப்புத்தியில் பதிந்திருக்கிறது. அந்த மாயக் காடு ஒழுக்க விதிகளுக்குப் புறம்பானது என்றே திரும்பத் திரும்பச் சொல்லப்படுகிறது. ஆனால், வேட்டைக்குச் செல்பவனுக்குத்தான் தெரியும், காடு எத்தகையது என்று. ஆபத்துகளும், காயங்களும், அச்சுறுத்தும் பெரும் தனிமையும், வெகு சொற்ப இரை விலங்குகளும், போட்டிகளும் விரோதங்களும் நிறைந்தது அந்தக் காடு. இரை விலங்குகள் அகப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும். அவனுக்கு அகப்பட்டது, இறுதியில் இயற்கையின் விதிப்படி இரைக்கு இரையானான்.
 
அவன் பெருமலைதான். ஆனால், என்றும் அவன் தன்னை அப்படி உணர்ந்தது இல்லை. மனிதர்களை அவர்களின் சம உயரத்திலேயே சந்தித்தான், பழகினான், பாராட்டினான். அவன் வரியில் சொல்ல வேண்டும் என்றால், சிறு புல்லில் உறங்கும் பனியில் தெரியும் மலையாகத்தான் தன்னை வைத்துக் கொண்டான். ஒரு சாதனையாளன், கவிஞன் கைக்கொள்கிற எந்த உடல்மொழியையும் அவன் உருவாக்கிக்கொள்ளவில்லை. உடைகளில் எந்த வடிவமைப்பையும் பொருத்திக்கொள்ளவில்லை. ஒரு ஓட்டை சைக்கிளில் அசோகமித்திரனின் உடல்வாகுடன் கோடம்பாக்கத்துத் தெருக்களில் முதல் வாய்ப்புக்காக சுற்றிக்கொண்டிருந்த நாட்களில் எப்படி இருந்தானோ அதே மனநிலையில் இறுதி நாள் வரை இருந்தவன்.
 
தமிழ்த் திரைப் பாடல்களில் நவீன வாழ்க்கையை, நவீன கவிதை ஆக்க முறையைப் பயன்படுத்தியவன் முத்துக்குமார். புதுப் புது உத்திகளை முன்வைத்தவன். ஹாஸ்யத்தையும் கொச்சைப்படுத்தாமல் செய்தவன். அவன் தமிழ்த் திரைப்படப் பாடல்களை அதுவரை இருந்த இடத்திலிருந்து மாற்றி வேறு ஒரு செறிவான தளத்துக்கு நகர்த்தியவன்.
 
அவன் தன் அரசியலைச் சொல்லவும் இல்லை. மறைக்கவும் இல்லை. தான் யாருக்காக எழுதுகிறோம், ஏன் இக்காரியத்தைச் செய்கிறோம் என்று தெரிந்தே அவன் செய்தான். எந்த இயக்கத்துக்குப் பாட்டு எழுதினான் என்பதை அவனும் சொல்லவில்லை, இயக்கமும் சொல்லவில்லை. அவன் எழுதிய பாட்டு என்று தெரியாத அந்தச் சில பாடல்கள் இன்னும் கேட்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
 
அம்மா இல்லாமல் வாழ்வைத் தொடங்கிய அவனுக்கு, உறவுகள் மீது தீராக் காதல். மகனாக, அண்ணனாக, தம்பியாக, பேரனாக, அப்பாவாக, கணவனாக அவன் அனைவருக்கும் தன்னால் இயன்றவரை தன் சக்திக்கு உட்பட்டு, பிரியத்தையும் ஆதரவையும் முழுமையாகக் கொடுத்தவன். வீடும் வீடு குறித்த எண்ணமுமே அவனுடைய வாழ்க்கை. வீடே அவன் சொர்க்கம்.
 
அவனை நான் முதன்முதலாகச் சந்தித்தபோது, நாங்கள் இருவரும் 20 வயதுகளின் பெரும் கனவில் சுற்றிக்கொண்டிருந்தோம். ‘சில்க் சிட்டி' (Silk City) என்று ஒரு ஆங்கில நாவலை எழுதிக் கொண்டிருந்தான் முத்து அப்போது. இந்திய ஆங்கில இலக்கியத்தில் தனக்கென ஒரு தடம் பதிக்க வேண்டும் என்ற முனைப்பு இருந்தது.
 
போட்ட உடையோடு பயணம் கிளம்பிப்போகிற குணங்களால் நாங்கள் இருவரும் பெரிதும் ஈர்க்கப்பட்டோம். தாம்பரம் கிறித்துவக் கல்லூரி ஏரியில் அமர்ந்து பேசுகிற ராப்பேச்சு சூரிய உதயத்தில் தான் நிற்கும்.
 
எனக்கு சென்னையைப் பரிச்சயப்படுத்தியது அவன் தான். கோடம்பாக்கத்துத் தெருக்களுக்கு என்னை அழைத்துப் போனவன், அறிவுமதி அண்ணனின் அலுவலகத்தைக் காட்டிக் கொடுத்தவன். பால் சுகந்தி மேன்ஷனில் இருந்த அன்பான அஜயன் பாலாவை அறிமுகப்படுத்தியவன். இயக்குநர், குரு பாலுமகேந்திராவின் அவ்வளவு எளிதாகத் திறந்துவிட முடியாத அலுவலகக் கதவை எனக்காகத் திறந்துவிட்டவன், யுவன் ஷங்கர் ராஜாவை அறிமுகப்படுத்தியவன், என் குழந்தைகளின் மாமா, என்னை நானாகவே ஏற்றுக்கொண்ட நண்பன் என முத்து இந்த 20 வருட வாழ்க்கை முழுக்க என் உடனேயே இருந்தான்.
 
ஆகஸ்ட் 14 காலை எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் வந்த முதல் மாரடைப்பே அவனை எடுத்துக்கொண்டது. 15 நிமிடம் முன்பு வந்திருந்தால் அவன் இருந்திருப்பான் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். ‘இறந்து போனதை அறிந்த பிறகுதான் இறக்க வேண்டும் நான்'என்று எழுதியவன், எதுவும் அறியாமலே இறந்துபோனான். மாயக் காடு அவனை எடுத்துக் கொண்டது. அந்தக் காட்டைப் பற்றியும் அதன் வேட்டைக்காரர்களைப் பற்றியும் கதை சொல்பவர்கள் கதை சொல்லத் தொடங்கிவிட்டார்கள். அவனுக்குக் கதைகள் பிடிக்கும். முத்து, நீ கேட்டுக் கொண்டிருப்பாய் தானே?
 
என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.