வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 9 செப்டம்பர் 2024 (10:46 IST)

'கல்வி நிறுவனங்களில் திரைப்பட ஆடியோ விழா நடத்தக்கூடாது: இயக்குனர் அமீர்

கல்வி நிறுவனங்களில் சில திரைப்பட இசை வெளியீட்டு விழாக்கள் நடைபெற்று வரும் நிலையில் இது போன்ற விழாக்கள் கல்வி நிறுவனங்களில் நடத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களுக்கு இயக்குனர் அமீர் கோரிக்கை விடுத்து கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறி இருப்பதாவது:
 
சென்னை அசோக்நகர் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிற்போக்குத்தனமான விஷக்கருத்துக்களைப் பரப்பிய மகாவிஷ்ணுவின் செயலைக் கண்டித்ததோடு மட்டுமில்லாமல் அவரின் மீது உரிய நடவடிக்கை எடுப்பேன் என்று உறுதியும் அளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கும், உரிய நடவடிக்கை எடுத்த காவல்துறைக்கும் பாராட்டுக்களும், நன்றியும்.
 
சக மனிதனை பிறப்பின் அடிப்படையில் தாழ்த்திப் பார்க்கின்ற சனாதன கருத்திற்கு எதிராக விழித்துக் கொண்டிருக்கும் தமிழினத்தை இப்போது ஆன்மீகம் என்ற போர்வையில், முற்பிறவி பாவங்கள் என்ற சொல் மூலம் வர்க்க ரீதியாாகவும், தொழில் ரீதியாகவும் மீண்டும் ஒரு கும்பல் அடிமையாக்க முயற்சி செய்கிறது என்பதை உணர்ந்து தமிழக அரசு விழிப்போது செயல்பட வேண்டிய தருணம் இது என்பதை அசோக் நகர் அரசினர் மகளிர் பள்ளியின் நிகழ்வு நம் எல்லோருக்கும் உணர்த்துகிறது.
 
தங்கள் கண்முன்னே நடைபெற்ற பிற்போக்குத்தனமான, மூட நம்பிக்கையான பேச்சுக்களைத் தடுக்காமல், கண்டும் காணாமல் நின்று கொண்டிருந்த ஆசிரிய பெருந்தகைகளுக்கு மத்தியில் தனது ஞானக்கண் கொண்டு அநீதியை தட்டிக் கேட்ட தமிழாசிரியர் சங்கருக்கு அமைச்சர்் உள்ளிட்டோர் பாராட்டுக்களை வழங்கியதோடு நின்றுவிடாமல் அதே பள்ளியில் அவரைத் தலைமை ஆசிரியராக நியமிக்க வேண்டும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியையும், தமிழக முதல்வரையும் நான் கேட்டுக் கொள்கிறேன்.
 
மேலும், சமூகத்தை வழிநடத்தக்கூடிய அறிவார்ந்த நாளைய தலைமுறைகளை உருவாக்கும் பட்டறையாக கல்வி நிலையங்களை உருவாக்க வேண்டியது அரசின் கடமை மட்டுமல்லாது சமூகப் பொறுப்புள்ள அனைவரின் கடமை என்பதை மறந்து சமீபகாலமாக தமிழ்நாட்டு கல்வி நிறுவனங்களில் இன்ஸ்டாகிராம், ரீலஸ் போன்ற சமூக வலைதளங்களிலும் யூ டியூப் ஊடகத்திலும் பிரபலமானவர்களையும் அழைத்து மாணவர்களிடையே உரையாடச் செய்வது அதிகரித்து வருகிறது.
 
எந்தவிதமான கல்வித் தகுதியோ, அறிவில் தேர்ச்சியோ, ஞான முதிர்ச்சியோ, முற்போக்குச் சிந்தனையோ இல்லாதவர்களை மாணவர்களின் முன்னிலையில் கொண்டு வந்து நிறுத்தி அவர்களை நாயகர்களாக சித்திரிப்பதும் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கச் சொல்வதும் மிகவும் வேதனைக்குரிய விஷயம் ஆகும்.
 
அதேபோல பள்ளி, கல்லூரிகளில் நடத்தப்படும் கலை நிகழ்ச்சிகளில் தலைமையேற்க அல்லது சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள திரைக்கலைஞர்கள் பங்கு பெறுவது ஏற்புடையதாகவே இருந்தாலும் வணிக நோக்கத்திற்காக தயாரிக்கப்படும் பிரபலமானவர்களின் திரைப்பட இசை வெளியீட்டு விழாக்களையும், திரைப்பட அறிமுக விழாக்களையும், கல்வி நிறுவன வளாகங்களில் நடத்துவது கல்வி கற்கச் செல்லும் மாணவர்களுக்கு கேடு விளைவிக்கக்கூடியதே. திரையரங்குகள் கல்விக்கூடமாக மாற வேண்டுமே தவிர, கல்விக்கூடங்கள் திரை அரங்குகளாக மாறக்கூடாது என்பதில் மக்களும், அரசும் கவனமாக இருக்க வேண்டும்.
 
எனவே, மாணவர்களின் எதிர்காலத்திற்கும் பொது சமூகத்திற்கும் எந்தவித பயனும் அளிக்காத திரைப்பட இசை வெளியீட்டு விழா மற்றும் அறிமுக விழாக்களை கல்வி நிறுவன வளாகங்களில் நடத்த அரசு தடை விதிக்க வேண்டும் என்றும், கல்வி நிறுவனங்களில் திரைக்கலைஞர்கள் மற்றும் சமூக ஊடக பிரபலங்கள் பங்கேற்று கருத்துரை வழங்க ஒரு வரைமுறையை ஏற்படுத்த வேண்டும் என்றும் முதலமைச்சரை நான் வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன்.
 
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran