திருப்பரங்குன்றம் மலை தொடர்பான சர்ச்சைகள், போராட்டங்கள் நீடித்து வரும் நிலையில் பக்தர்கள் மலையேற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் மலையின் அடிவாரத்தில் முருகன் கோவிலும், மலை மேல் காசி விஸ்வநாதர் ஆலயம் மற்றும் சிக்கந்தர் தர்காவும் அமைந்துள்ள நிலையில் சமீபமாக அங்கு மதவாத பிரச்சினை தலைத்தூக்கியுள்ளது. இந்து அமைப்புகள் அந்த மலை முழுவதும் இந்துக்களுக்கே சொந்தம் என குரல் எழுப்பி வருகின்றன.
இந்நிலையில் நேற்று இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் திருப்பரங்குன்றத்தில் போராட்டம் நடத்த திட்டமிட்டதால் 144 தடை உத்தரவு போடப்பட்டு 800 காவலர்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். அசாதாரணமான சூழலை கருத்தில் கொண்டு நேற்று பக்தர்கள் மலையேற தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்து அமைப்புகள் போராட்டம் நடத்த வேறு இடம் ஒதுக்கப்பட்டு பிரச்சினை முடித்து வைக்கப்பட்டது. எனினும் இன்றும் திருப்பரங்குன்றத்தின் பல பகுதிகளிலும் போலீஸ் பாதுகாப்பு தொடர்கிறது. இன்று முதல் பக்தர்கள் மலைமீதுள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கும், சிக்கந்தர் தர்காவுக்கும் செல்லலாம் என அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அதேசமயம் கட்சியாகவோ, இயக்கமாகவோ மலை ஏற அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சி கொடி உள்ளிட்டவற்றையும் எடுத்து செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. விரைவில் திருப்பரங்குன்றத்தில் இயல்பு நிலை திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Edit by Prasanth.K