கூலிப்படை கலாச்சாரமா? இல்லவே இல்லை : அடித்து சொல்கிறார் ஜெயலலிதா
கூலிப்படையினுடைய நடமாட்டத்தை கட்டுப்படுத்த முடியாத நிலை இருந்து கொண்டிருக்கிறது என்று எதிர்க் கட்சித் தலைவர் கூறினார். இது உண்மைக்கு மாறான ஒரு குற்றச்சாட்டு என்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
சட்டமன்றத்தில் ஆளுநர் உரை மீதான விவாதங்களுக்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா, “அண்மைக் காலமாக அடுத்தடுத்து நடக்கக் கூடிய கொலைகள், கொள்ளைகள், கூலிப்படையினருடைய அட்டகாசம் ஒழிக்கப்பட்டாக வேண்டும் என்றும், கூலிப்படையினுடைய நடமாட்டத்தை கட்டுப்படுத்த முடியாத நிலை இருந்து கொண்டிருக்கிறது என்றும் எதிர்க் கட்சித் தலைவர் கூறினார். இது உண்மைக்கு மாறான ஒரு குற்றச்சாட்டு” என்றார்.
மேலும் அவர் கூறுகையில், “கொலை சம்பவங்கள் குறித்து நாளேடுகளில் செய்திகள் வெளியாகும் போது, பொதுவாக அவை கூலிப்படையினரால் நடைபெற்றதாக செய்திகள் வெளிவருகின்றன. ஆனால், பெரும்பாலான சம்பவங்களில் கொலையுண்டவர்களின் எதிரிகள், உறவினர்கள், கூட்டாளிகள் அல்லது நண்பர்கள் ஆகியோரே இச்செயலில் ஈடுபடுகின்றனர்
முன் விரோதம் காரணமாக, பழிக்குப் பழியாக மாறி மாறி கொலைகள் நடக்கும் போது அச்சம்பவங்களில் இரு தரப்பினருக்கும் வேண்டியவர்களே சம்பந்தப்படுகிறார்கள். ஆனால் அது போன்ற சம்பவங்களிலும் கூலிப்படையினர் ஈடுபட்டதாக செய்திகள் வெளி வருகின்றன.
அண்மையில் நடைபெற்ற சில கொலை சம்பவங்களிலும் கூலிப்படையினர் ஈடுபடவில்லை. கூலிப்படையினரை அறவே ஒழிக்க, தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் காவல் துறையினர் எடுத்து வருகின்றனர்” என்று முதலமைச்சர் கூறினார்.